விடுதலைப் புலிகள் தளபதி பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்? | Is Pottu Amman alive? - interpol statement

வெளியிடப்பட்ட நேரம்: 01:55 (16/06/2018)

கடைசி தொடர்பு:10:55 (16/06/2018)

விடுதலைப் புலிகள் தளபதி பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்?

மர்மங்களின் மர்மமாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பொட்டு அம்மான்

ர்மங்களின் மர்மமாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு தலைவர்தான், பொட்டு அம்மான் என்கிற சண்முகலிங்கம் சிவசங்கர். விடுதலைப்புலிகளின் மூளையாகச் செயல்பட்ட முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். முக்கிய ஆபரேஷன்களை வகுத்துக்கொடுத்து அதை நடத்துபவராகவும், கண்காணிப்பவராகவும் பொட்டு அம்மான் இருந்தார். சில நேரங்களில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மற்ற தளபதிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், பொட்டு அம்மான் மற்றும் பிரபாகரனுக்கிடையே ஒருபோதும் கருத்து வேறுபாடே வந்தது கிடையாது. பொட்டு அம்மான் என்ன செய்கிறார் என்பது பிரபாகரனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதனால்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு அடுத்தபடியாகப் பார்க்கப்பட்டார். 

பிரபாகரன்

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயரதிகாரிகள் சொல்லிவந்தனர். இறுதிப்போரின்போது, அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூசை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முக்கியமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அவர்களின் உடலை இலங்கை அரசு காட்டியது. அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகரனே இறந்துவிட்டார் என  ஓர் உடலைக் காட்டி மக்களை நம்பவைத்தது இலங்கை அரசு. ஆனால், பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதற்கு சாட்சியாக அவரது உடலை இலங்கை அரசால் காட்ட முடியவில்லை. பொட்டு அம்மானின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டைகள் தோல்வியில் முடிந்தன.  அதனால் பொட்டு அம்மான் உயிருடன்தான் உள்ளார் என மக்கள் நம்பிவருகிறார்கள். இந்த நிலையில், பொட்டு அம்மானைப் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ``பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது" என எச்சரிக்கை விடுத்து, தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மானின் பெயரையும் சேர்த்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

பொட்டு அம்மானைப் பற்றிய தகவல்கள் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து மர்மமாகவே இருந்துவந்த நிலையில், தற்போது அவர் இத்தாலியில் வசித்து வருவதாக ரகசியத் தகவல்கள் கசிந்துவருகின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று சரிவர தெரியவில்லை.