`நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்தான்!' - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரூடம் | rahul gandhi will be the next prime minster says sidhu

வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (16/06/2018)

கடைசி தொடர்பு:09:24 (16/06/2018)

`நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்தான்!' - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரூடம்

`காங்கிரஸ் தலைமையில், மதச்சார்பற்ற கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும்' என உறுதிபடக் கூறுகிறார் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து. 

சித்து ராகுல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து அக்கட்சியின்       எம்.பி-யாக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில இடைத்தேர்தலின்போது பா.ஜ.க-வில் இருந்து விலகி காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். காங்கிரஸில் சேர்ந்த அவருக்கு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இதில் வெற்றிபெற்ற அவர், அம்ரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார். 

பா.ஜ.க-வில் இருந்து விலகியபின், மோடி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சித்து, `மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டுவருகிறது. பா.ஜ.க-வை வீழ்த்த, காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும். நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான். அதில் எந்த மாற்றமும் இல்லை' என்றார்.