`இப்போ எதுக்கு இந்த வெற்றி விழா?’ - காவிரி விவகாரத்தில் விவசாயிகள் காட்டம்

CM Meeting

எடப்பாடி பழனிசாமி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். மூன்று முறை தேதி குறிப்பிட்டு ஒத்தி வைக்கப்பட்ட இவ்விழா, வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

காவிரி 

விவசாயிகள்இதுபற்றி காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் திருவரசமூர்த்தியிடம் பேசினோம், `கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்குக் காவிரியில் தண்ணீர்ப் பெற்றுத்தர வக்கில்லை.  கடலோரக் கிராமங்களில் குடிநீரை குடம் ஒன்று ரூ.10-க்கு வாங்கிக் குடிக்கவேண்டிய அவலநிலை உள்ளது. இந்த லட்சணத்தில் காவிரியில் தண்ணீர்  கரைபுரண்டு ஓடச்செய்ததுபோல வெற்றி விழா கொண்டாட்டம் எதற்கு, என்ன சாதனை செஞ்சிட்டாங்க? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாமல் காவிரி ஆணையம் என்ற ஏமாற்று வலையில் சிக்கி மத்திய அரசின் கைக்கூலியாகச் செயல்படுகிறது தமிழக அரசு.  பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் கிடக்கு. தற்போது மஞ்சளாறு, விக்கிரமசோழன் ஆறு போன்றவற்றில் நல்ல நிலையில் உள்ள மதகுகளை இடித்துவிட்டு, தரமற்ற கான்கிரீட் மதகுகளைக் கட்டிவருகிறார்கள்.  இது, ஆளும்கட்சிப் புள்ளிகளுக்கு மறைமுகமாக அரசின் பணத்தை ஒதுக்கித் தரும் திட்டம்.  இப்படி விரயம் செய்கிற பணத்தை தடுப்பணை கட்டப் பயன்படுத்தலாம்.  மழைநீரை சேமிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. முதல்வர் பங்கேற்கும் மயிலாடுதுறை விழாவில் விவசாய சங்கப் பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆளும் கட்சிக்காரர்கள் பணத்துடன் அலைகிறார்கள். அவர்களைக் கண்டாலே அஞ்சி ஓடும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.  இந்நிலையில், இப்படியொரு விழா தேவைதானா’ என்று கண்டனம் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!