ரமலான் மாதத்தில் மதங்களைக் கடந்த பாடகர் மனோ!

ரமலான் மாதத்தில் மதங்களைக் கடந்த பாடகர் மனோ!

சில ஆண்டுகளாக, நாட்டில் ஏற்படும் மத சச்சரவுகளுக்குப் பஞ்சமே இல்லை. இதற்கிடையே, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக சில சம்பவங்களும் நிகழ்கின்றன. ரமலான் மாதத்தில் இந்துக் கோயில்கள் ரம்ஜான் விருந்தளிப்பது, இஸ்லாமிய மக்களுக்கு இந்துக்கள் உதவி புரிவது , சிரியா அகதிகளுக்கு சீக்கிய மக்கள் ரமலான் விருந்தளிப்பது என்று ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடந்து, மனதுக்கு இதம் தருகின்றது. அந்த வகையில், இஸ்லாமியரான பாடகர் மனோ, ரமலான் மாதத்தில் இந்துக் கோயிலுக்குச் சென்று சுவாமியை வழிபட்டது சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டுவருகிறது. 

காஞ்சி கோவிலில் பாடகர் மனோ தரிசனம்

ஆந்திராவைச் சேர்ந்த மனோவின் இயற்பெயர், நாகூர் பாபு. பாசில் இயக்கிய 'பூவிழி வாசழிலே ' படத்தில்தான் மனோ முதன் முதலா 'அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே' என்ற பாடலைப் பாடினார். தமிழகத்தில், புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஹனிபா இருந்த காரணத்தால், இசையமைப்பாளர் இளையராஜா, நாகூர் பாபு என்ற பெயரை மனோ என்று மாற்றினார். பிற்காலத்தில், தமிழகத்தின் புகழ்பெற்ற பாடகராக மாறிய மனோ, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதே பலருக்கும் தெரியாது. சமீபத்தில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்ற மனோவுக்கு கோயில் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பெருமாளைப் பாடி சேவித்தார். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்துக் கடவுளை வழிபட்டது மக்களுக்கு வியப்பை அளித்தது. 

பாடகர் மனோவிடம்,' காஞ்சி வரதாராஜப் பெருமாள் கோயிலுக்குப் போயிருந்தீர்களா?' என்று கேட்டோம். சட்டென்று 'ஆமாயா... கடவுளைப் பார்க்க போயிருந்தேன். 9-ந் தேதி எனக்கு திருமண நாள். நானும் என் மனைவியும் சென்று இறைவனை வழிபட்டோம் ''  என்று பதில் தந்தார். 

'நீங்கள் ஒரு இஸ்லாமியர், காஞ்சி பெருமாள் மீது எப்படி உங்களுக்கு பக்தி வந்தது' என்று அடுத்த கேள்வி எழுப்பினால், ''முதல்ல நான்  ஒரு கலைஞன். எனக்கு எந்த மதமும் சம்மதம். ஞாயிற்றுக்கிழமைனா சர்ச்சுக்குப் போவேன். எல்லா கடவுளும்தான் எனக்கு படியளக்குறாங்க. எங்கோ இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது அவன் செயல்தானே'' என்றவருக்கு, ரம்ஜான் வாழ்த்துகள் கூறினோம்.

மனோ, மதங்களைக் கடந்த மனிதர்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!