வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (16/06/2018)

கடைசி தொடர்பு:13:26 (16/06/2018)

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!

தேனியில் அதிகரித்துள்ள எத்திலீன் வாழைப்பழம்! பொதுமக்கள் அச்சம்!

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!

தேனி மாவட்டம் விவசாயத்துக்கு புகழ்பெற்றது. குறிப்பாக வாழைப்பழம். தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி, மதுராபுரி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியில் தமிழக அளவில் தேனி மாவட்டம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தேனி வாழைப்பழத்துக்கு என தனி இடம் உண்டு. இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், வாழைக்காய்மீது எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கும் முறை தேனி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், வாழைப்பழங்களை வாங்கிச் சாப்பிட பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வாழைப்பழம்

ஒரு டன் வாழைப்பழம் பறிமுதல்: 

எத்திலீன் மூலம் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேனி உழவர் சந்தையில் உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கப்பட்ட ஒரு டன் வாழைப்பழம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எத்திலீன் தெளிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை இரண்டும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை நியமன அலுவலர் சுகுணாவிடம் பேசினோம்.

``எத்திலீன் மூலம் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்ததும், அதிரடிச் சோதனையில் இறங்கினோம். அப்போது எத்திலீன் செலுத்தும் இயந்திரம் மற்றும் எத்திலீன் தெளிக்கப்பட்ட வாழைப்பழம் ஒரு டன் அளவில் கைப்பற்றப்பட்டது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இது போல செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை.  அவற்றை  உட்கொண்டால், தோல் பிரச்னை உட்பட உடலில் பல பிரச்னைகளும் ஏற்படும். அதனால், கைப்பற்றப்பட்ட வாழைப்பழங்களை உடனே அழித்துவிட்டோம். வியாபார நோக்கத்துக்காக இப்படிச் செய்கிறார்கள். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வாழைப்பழம்

ஆறு வியாபாரிகளின் உரிமம் ரத்து: 

இது தொடர்பாக, உழவர் சந்தை அலுவலர் சின்னவெளியப்பனிடம் பேசினோம், ``விவசாயிகள் இப்படிச் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு விவசாயிகளின் வியாபார உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இனி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

உழவர் சந்தை

பொதுமக்கள் பெரிதும் விரும்புவது உழவர் சந்தையைத்தான். நேரடியாகத் தங்களின் தோட்டங்களில் இருந்து காய்கறி, பழங்களை விவசாயிகளே கொண்டு வருவதுதான் இதற்குக் காரணம். எல்லாப் பொருள்களும் புதிதாக இருக்கும் என்ற நம்பிக்கையை இன்று வரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் உழவர் சந்தையில், ஒரு டன் எத்திலீன் தெளிக்கப்பட்ட வாழைப்பழம் கைப்பற்றப்பட்டது மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வெளி மாவட்ட மக்களின் மனதில் தேனி மாவட்ட வாழைப்பழத்தின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், இவ்விவகாரத்தில் தலையிட்டு வேறெந்தப் பகுதிகளில் இதுபோன்ற எத்திலீன் வாழைப்பழம் மக்களுக்கு விற்கப்படுகிறது எனக் கண்டறிந்து அழிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிக லாபத்துக்காக சிலர் செய்யும் இதுபோன்ற விஷயங்களை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உழவர் சந்தை போன்ற இடங்களின் தலையாய கடமை என்பதை தவறு செய்யும் விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்