`நான்தான் கொலை செய்தேன்; ஆனால்...’ - கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சிக்கியவர் அதிர்ச்சி வாக்குமூலம்

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான பரசுராம் வாக்மோர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கெளரி லங்கேஷ்
 

கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். மூத்த பத்திரிகையாளரான கெளரி லங்கேஷ், ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்ததே அவர் கொல்லப்பட்டதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. கெளரி லங்கேஷின் படுகொலை, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கியையும் கெளரியையும் கொலை செய்வதற்கு ஒரே துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கல்புர்கி 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கர்நாடகாவில் உள்ள தார்வாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்புர்கி கொலை தொடர்பாக இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

கெளரி லங்கேஷ் வழக்கில் தேடப்பட்டுவந்த பரசுராம் வாக்மோரே பெங்களூரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். 26 வயதான பரசுராம் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

பரசுராம்

ஸ்ரீ ராம் சேனா அமைப்புத் தலைவருடன் பரசுராம்
 

ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராமை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தது. தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஐ.டி வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகங்களுக்கு எஸ்.ஐ.டி அதிகாரி அளித்த பேட்டியில், பரசுராம் அளித்த வாக்குமூலம் பற்றி பேசியிருக்கிறார். கெளரி லங்கேஷை ஏன் கொலை செய்தேன் என்று பரசுராம் சொன்ன காரணங்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளன.

பரசுராம் அளித்த வாக்குமூலம் பற்றி எஸ்.ஐ.டி அதிகாரி ஒருவர் கூறுகையில்..

 ‘ 2017-ம் ஆண்டு மே மாதம் சிலர் என்னை அணுகி, உன் மதத்தைக் காப்பாற்ற ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்றனர். நான் ஒப்புக்கொண்டேன். ஆனால், நான் யாரைக் கொலை செய்யப்போகிறேன் என்று எல்லாம் எனக்குத் தெரியாது. செப்டம்பர் 3-ம் தேதி பெங்களூரு அழைத்து வரப்பட்டேன். அங்கு எனக்கு ஏர்கன் (Airgun) கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் செப்டம்பர் 5-ம் தேதி ஒருவர் என்னை பைக்கில் கெளரி லங்கேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினேன். நான்கு குண்டுகள் பாய்ந்தன. அப்போதுவரை எனக்கு நான் கொலை செய்தது யாரென்றே தெரியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 `கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பல் மிகப்பெரிய நெட்வொர்க் எனத் தெரியவந்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 60 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம்’ என்று போலீஸ் யூகித்துள்ளது. 

Credits : Times Of India

Do you like the story?

Please Appreciate the Author by clapping!