வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (16/06/2018)

கடைசி தொடர்பு:13:27 (16/06/2018)

காற்றுக்காக வெளியே தூங்கிய பெண்ணுக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

இன்று காலை எழுந்துசென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, இரண்டு வீடுகளில் பின் பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விருத்தாசலம் அருகே உள்ள பூவனூர் ஸ்ரீராம் நகரில் வசித்துவருபவர் சுகுணா (35). இவரது கணவர் பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்துவருகிறார். இங்கு சுகுணா, இவர்களது மகன்கள் மாதேஷ் (5), கோபேஷ் (3), மாமியார் தனம் ஆகியோர் வசித்துவருகின்றனர். மாமியார் தனம் மற்றும் குழந்தைகளுடன் வீட்டுக்கு வெளியே உள்ள ஹாலில், காற்றுக்காக நேற்றிரவு தூங்கியுள்ளனர்.

கொள்ளை நடந்த பெண் வீடு

இன்று காலை எழுந்துசென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 37 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதேபோல, இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் வேணுகோபாலின் மனைவி பத்மா (35) என்பவரின் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுகுணா, பத்மா ஆகிய இருவரும் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடந்துவருகிறது. ஒரே பகுதியில் அருகருகே நடந்த இந்த கொள்ளைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.