வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (16/06/2018)

கடைசி தொடர்பு:13:36 (16/06/2018)

'ஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது!'  - எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' அலெர்ட்

' ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்' எனப் பேசியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

'ஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது!'  - எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' அலெர்ட்

தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனின் திடீர் அறிவிப்பு, 17 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்' எனப் பேசியிருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி

' எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என்ற கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்தற்காக, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து, 18 எம்.எல்.ஏ-க்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பும் முரண்பட்டதாக அமைந்துவிட்டது. ' தகுதிநீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ' தகுதிநீக்கம் செல்லாது' என நீதியரசர் சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் முடிவுக்கு இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்க்காத தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், ' இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன்' என்றவர், ' கட்சித் தாவல் தடைச்சட்ட வரம்புக்குட்பட்டு நாங்கள் வரவில்லை. ஆனால், பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள்மீது கட்சித் தாவல் தடைச்சட்டம் பாய்ந்திருக்க வேண்டும். அவர்கள் நிரபராதிகள் என இதே நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார். எங்களை அவர் கண்டித்திருக்கிறார். என்னுடைய ஆண்டிபட்டி தொகுதியில், கடந்த ஒன்பது மாதங்களாக எம்.எல்.ஏ என்று யாரும் இல்லை. மக்களின் சிறு கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றித் தர முடியவில்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரு வருடம் ஆகிவிடும். எனவே, நான் தொடர்ந்த வழக்கை வாபஸ்பெறுகிறேன். என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து, நிரந்தரமான ஒரு எம்.எல்.ஏ வரட்டும். இது என்னுடைய முடிவு. நான் தினகரன் அணியில் தொடர்ந்து நீடிக்கிறேன்' என அதிரவைத்தார். 

தங்க.தமிழ்ச்செல்வன்இந்த முடிவு குறித்துப் பேசிய தினகரனும், 'இதர 17 எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு இது அல்ல. அவர்கள் சட்டபூர்வமாகப் போராடும் நிலையில் இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து என்னுடன்தான் இருப்பார். தேர்தல் வந்தாலும் குக்கர் சின்னத்தில்தான் அவர் போட்டியிடுவார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் இப்படியொரு முடிவை எடுத்தார்' என்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தினகரனுடன் இருக்கும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க பக்கம் வருவார்கள் என எதிர்பார்த்தோம். இதைப் பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், ' தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்துக்கொள்வதுபற்றி முதல்வர் முடிவெடுப்பார்' என்றார். ஆனால், அப்படி யாரும் இங்கு வரவில்லை. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்குப் பிறகு, அவர்கள் ஒரு முடிவை எடுக்கலாம். இப்படியொரு தீர்ப்பு வரும் என தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதேநேரம், தங்க தமிழ்ச்செல்வனின் முடிவுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 

இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், ' ஆண்டிபட்டியில் இடைத்தேர்தலைக் கொண்டுவந்து, போட்டியிட்டு ஜெயிக்கலாம் என நினைக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அப்படித் தேர்தல் வந்தால், நமக்கு எந்தப் பாதகமும் இல்லை. கண்டிப்பாக, அ.தி.மு.க-தான் வெற்றிபெறும். இரண்டாவது இடத்துக்கு தினகரன் வருவார்; தி.மு.க-வுக்கு மூன்றாவது இடம் கிடைக்கும். எதை எப்படிச் செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். எடப்பாடி தொகுதி அரசியலும் எனக்குத் தெரியும். ஆண்டிபட்டி அரசியலும் எனக்குத் தெரியும். ஒரு கிளைச் செயலாளராக இருந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இடைத்தேர்தல் என்று சொல்லி பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதற்கெல்லாம், நான் பயப்பட மாட்டேன். ஆண்டிபட்டியில் இரண்டாம் இடத்துக்குத்தான் தினகரனும் ஸ்டாலினும் போட்டிபோடுவார்கள். எங்கே, எப்படியெல்லாம் தினகரன் காய்களை நகர்த்துவார் என எனக்குத் தெரியும்' என ஆவேசப்பட்டவர், 

' மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் காவிரி வெற்றிக் கூட்டத்தை நான் நடத்திவருகிறேன். தினகரனுக்கு 60 தொகுதிகளைத் தாண்டி எங்குமே ஆட்கள் கிடையாது. திருச்சி, தஞ்சாவூர் உள்பட 50 தொகுதிகளில்தான் இவர்களுக்கு சமூகரீதியாக ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டம் நடத்துவதற்குக்கூட இவர்கள் ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்டிபட்டியில் மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றிபெறவைத்து, தன்னை பலப்படுத்திக்கொள்ளலாம் என கனவு காண்கிறார் தினகரன். இந்தமுறை நாம் கோட்டைவிட  மாட்டோம். தன்னுடைய பலவீனத்தை மறைப்பதற்காக இதுபோன்ற முடிவை எடுத்திருக்கிறார் தினகரன். சாதி அடிப்படையில் அந்தத் தொகுதியில் வெற்றிபெற முடியும் என அவர் நினைக்கிறார். அதற்காக தங்க தமிழ்ச்செல்வன் முதுகைப் பயன்படுத்திக்கொள்கிறார். இந்தமுறை அவ்வளவு எளிதில் ஆண்டிபட்டி தொகுதியை விட்டுவிட மாட்டோம்'  என்றார் கொதிப்போடு. இந்தக் கருத்தை அமைச்சர்களும் கேட்டுக்கொண்டனர்" என்றார் விரிவாக. 

" ஆண்டிபட்டித் தொகுதிக்கு அவ்வளவு எளிதில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல, நீட்டித்துக்கொண்டே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ' ஆர்.கே.நகர் வெற்றியை கோட்டைவிட்டதுபோல, ஆண்டிபட்டியையும் கைவிட்டுவிட்டால், அ.தி.மு.க தலைமை மீதான கேள்விக்குறி அதிகரித்துவிடும். அதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது' என அச்சப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் விளைவாக, ஆண்டிபட்டி தொகுதி நிலவரத்தைச் சேகரிக்குமாறு உளவுத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.