வேலையில்லாத விரக்தியில் எம்.டெக் பட்டதாரி எடுத்த விபரீத முடிவு!

செல்போன்

சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட எம்.டெக் பட்டதாரியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் தொடர்ந்து செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதைத்தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். ஷிப்ட் முறையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தினமும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைமறைவு குற்றவாளிகள் பலர் சிக்கிவருகின்றனர். இந்தநிலையில் பரங்கிமலைப் பகுதியில் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மவுன்ட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாகச் சென்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினோம். அவரிடம் வாகனத்துக்குரிய சான்றிதழ்கள் எதுவும் இல்லை. விசாரணையில் வாலிபரின் பெயர் விக்ரம், சிதம்பரம், புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர், எம்.டெக் வரை படித்துள்ளார். வேலை இல்லாததால் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். அதைத்தொடர்ந்து விக்ரமை கைதுசெய்துள்ளோம். எங்களின் சோதனையில் சிக்கும் குற்றவாளிகளில் பலர் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது" என்றனர். 

விக்ரம், எங்கெல்லாம் கைவரிசை காட்டினார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அவரிடமிருந்து பைக், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  எம்.டெக் படித்தவர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!