'வாட்ஸ்அப் புளூ டிக் போதும்!' - கிரெடிட் கார்டு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

'வாட்ஸ்அப் மூலம் வழக்கு ஆவணங்களை அனுப்பினாலும், சட்ட விதியின்கீழ் அது செல்லுபடியாகும்' என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வாட்ஸ் அப்

மும்பையைச் சேர்ந்த ரோகித்தாஸ் ஜாதவ் என்பவர், பாரத ஸ்டேட் வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கியிருந்தார். இந்த கார்டின் மூலம் நடத்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக, கடந்த 2010-ம் ஆண்டு 85,000 ரூபாய் கடன் வைத்திருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வங்கியின் சார்பில் பலமுறை எச்சரிக்கப்பட்டும், இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டே வந்தார். இதையடுத்து, வட்டியுடன் சேர்த்து 1,75,000 ரூபாய் செலுத்த வேண்டும் என ஜாதவ் மீது வழக்குத் தொடர்ந்தது எஸ்.பி.ஐ வங்கி. இதுதொடர்பாக, தபால் மூலம் ரோகித்துக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இதற்கு எந்தப் பதிலும் வராததால், அவரது வாட்ஸ்அப் மொபைல் எண்ணுக்கு பி.டி.எஃப் வடிவில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீஸ்களையும் அவர் நிராகரித்திருக்கிறார். ஒருகட்டத்தில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ரோகித், 'வீடு மாறிவிட்டதால், வங்கி அனுப்பிய நோட்டீஸ் கிடைக்கவில்லை. அதனால், தன்னால் குறிப்பிட்ட நாளில் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' எனத் தெரிவித்தார்.

இந்தப் பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், ' வாட்ஸ்அப்பில் வங்கி அனுப்பிய நோட்டீஸைப் பார்த்ததற்கான புளூ டிக் அடையாளம் உள்ளது. எனவே, வங்கிக் கடனை உடனடியாக திருப்பிச்செலுத்துங்கள். வழக்கு தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ்அப் வழியாக அனுப்பினாலும் அது செல்லும்' எனத் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!