வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (16/06/2018)

கடைசி தொடர்பு:14:25 (16/06/2018)

நிலக்கரியைக் கையாளுதலில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஒரே நாளில் 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஒரே நாளில் 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. 

thoothukudi port

இந்தியத் துறைமுகங்களில் சிறப்புப் பெற்றது, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம். சரக்குப் பெட்டகத்தைக் கையாளுதலில் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் புரிந்துவருகிறது. கடந்த 14-ம் தேதி, இத்துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளத்தில், ஒரே நாளில் 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

இது குறித்து துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் ரிங்கேஷ் ராய் விடுத்துள்ள அறிக்கையில், “வ..உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கப்பல் சரக்குத் தளம் 9-ல் கடந்த 14.06.18 அன்று எம்.வி.அல்ட்ரா குஜராத் (M.V.Ultra Gurajat) என்ற கப்பலில் இருந்து 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.  

இந்தச் சாதனை, இதற்கு முந்தைய சாதனையான கப்பல் சரக்கு தளம் 9-ல் கடந்த 19.02.18 அன்று எம்.வி. ஷி கோப் (M.V. Sea Hope) என்ற கப்பலில் இருந்து கையாளப்பட்ட அளவான 45,396 மெட்ரிக் டன் நிலக்கரியைவிட அதிகமாகும். இந்த நிதியாண்டு 2018-19 (2018 ஜூன் 14 வரை ) வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 28.49 லட்சம் டன்கள் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டு கையாளப்பட்ட நிலக்கரி அளவான 26.49 லட்சம் டன்களை விட 7.15 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இச்சாதனையைப் படைக்க முடிந்தது” என தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க