வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (16/06/2018)

கடைசி தொடர்பு:14:45 (16/06/2018)

இரண்டு மாவட்டங்களில் ரவுடி ராஜ்ஜியம்... 'ஓட்டை தினேஷ்' சிக்கிய திகில் கதை

ரவுடி

சென்னையில், சுங்கத்துறை அதிகாரி வீட்டில் திருடிய பணத்தில் கள்ளத்துப்பாக்கி வாங்கிய ரவுடி ஓட்டை தினேஷ் மற்றும் பிரபல ரவுடியின் அண்ணன், அவரின் கூட்டாளி என மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

சென்னை மாநகரம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸாரின் அதிரடிச் சோதனையில், நீண்ட காலமாகத் தலைமறைவுக் குற்றவாளிகள் பலர் சிக்கிவருகின்றனர். அந்த வகையில், வீட்டை உடைத்துக் கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையனும் ரவுடியுமான ஓட்டை தினேஷை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவருடன் பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனின் அண்ணன் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணனின் வலதுகரமான மார்ட்டின் ஆகியோரும் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி கூறுகையில், ``பரங்கிமலைப் பகுதியில் செயின் பறிப்பு வழக்கில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கடந்த நான்கு  நாள்களாக அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரை 35 குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.  கடந்த 21.5.2018ல், சென்னை ஆலந்தூர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி கில்ஸ்ஜோஸ் வீட்டில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளை போனது. இதுகுறித்து அவர் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கொள்ளையர்களைத் தேடிவந்தோம். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது, பிரபல கொள்ளையன் தினேஷ் என்ற ஓட்டை தினேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் டி.பி. சத்திரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற ராதா, பிரபல ரவுடியின் அண்ணன் ராமகிருஷ்ணன், ராதாவின் வலதுகரமான மார்ட்டின் ஆகியோரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் பிடித்தனர். 

ஓட்டை தினேஷ் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதுபோல ராமகிருஷ்ணன், மார்ட்டின் ஆகியோர் மீதும் கொலை, கொலை முயற்சி எனப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளையனான ஓட்டை தினேஷிக்கு ரவுடி ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, கொள்ளையடிப்பதோடு ரவுடி சாம்ராஜ்ஜியத்திலும் ஓட்டை தினேஷ் ஈடுபட்டார். சுங்கத்துறை அதிகாரி கில்ஸ் ஜோஸ் வீட்டில் திருடிய பொருள்களை விற்ற ஓட்டை தினேஷ், அந்தப் பணத்தைக் கொண்டு நாட்டுத்துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அதன்மூலம் ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிக்கட்டிப் பறந்துள்ளார்.  இந்தக் கும்பலிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள், லேப்டாப், பைக், செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்துள்ளோம். ஓட்டை தினேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவுசெய்துள்ளோம்" என்றார். 

போலீஸார் கூறுகையில், ``ரவுடிகள் பட்டியலில் தினேஷ் என்ற பெயரில் இரண்டு பேர் உள்ளனர். இதனால், அவர்களை அடையாளப்படுத்தத்தான் இவருக்கு ஓட்டை தினேஷ் என்று அடைமொழி சூட்டப்பட்டுள்ளது. இவரின் பற்களில் ஓட்டைகள் இருப்பதால், ஓட்டை தினேஷ் என்று அழைக்கப்பட்டுள்ளார். பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனுக்கும் சென்னை, மாங்காடு மலையம்பாக்கம் கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடி போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய ரவுடி பினுவுக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துவருகிறது. ராதாகிருஷ்ணனை பிரபல கொள்ளையன் ஓட்டை தினேஷ் சிறையில் சந்தித்துள்ளார். அதன்பிறகு, இருவரும் நண்பர்களாகியுள்ளனர். ராதாவின் நம்பிக்கையைப் பெற்ற விசுவாசியாக மாறியுள்ளார் ஓட்டை தினேஷ். அதன்பிறகு கொள்ளையடிப்பதைவிட ராதாகிருஷ்ணன் கொடுத்த அசைன்மென்ட்டுகளைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்துள்ளார். இதற்காகத்தான் நாட்டுத்துப்பாக்கியை வாங்கியுள்ளார். இந்தச் சமயத்தில்தான், ஓட்டை தினேஷ் எங்களிடம் சிக்கிவிட்டார்" என்றனர்.