'ந‌ள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்வதை நிறுத்துங்கள்!'- தூத்துக்குடி எஸ்.பி-யிடம் நல்லகண்ணு நேரில் மனு

விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்துள்ள நிலையில், காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கையால் குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

தூத்துக்குடியில், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்திட வலியுறுத்தியும் கைதுசெய்தவர்களை விடுவிக்கக்கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். 

நல்லகண்ணு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பல கட்சிகள், அமைப்புகள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்கிறோம் எனக் காரணம் கூறி, காவல்துறையினர் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் உண்ணாவிரதம் இருக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது நடவடிக்கையை நிறுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம்  கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அமைதியான முறையில், ஜனநாயக வழியில் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் 13  அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, அதில் பலர் பிணையில் உள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 20 நாள்கள் ஆன நிலையிலும், இன்னமும் வீடுகளைத் தட்டி, நள்ளிரவில்  புகுந்து பெண்களை மிரட்டி, ஆண்களை காவல்துறையினர் கைதுசெய்து வருகின்றனர். தூத்துக்குடியில் மக்கள் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பிவரும் நிலையில், காவல்துறையினரின் இந்தக் கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறந்துள்ள நிலையில் காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கையால் குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கைது நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ரத்துசெயப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சீல் வைக்கப்பட்டது மட்டும் போதாது. அமைச்சரவையைக் கூட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!