வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/06/2018)

கடைசி தொடர்பு:21:23 (16/06/2018)

`ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து இல்லை!’ - வாகா எல்லை நிலவரம்

`காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நடந்துவரும் தாக்குதல்கள் காரணமாக, வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் ரம்ஜான் பண்டிகைக்காக இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

வாகா

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், புனித ரமலான் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் ஆண்டுதோறும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளைக் கொடுத்து, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கம், இந்த ஆண்டு நடக்கவில்லை. காரணம், பாகிஸ்தான் ராணுவப் படையினர் போர் ஒப்பந்த தடையை மீறி, காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுதான்.

இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் பக்கம் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஶ்ரீநகரில் இன்று காலை ரமலான் தொழுகைக்குப் பிறகு, இளைஞர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதிக்கு விரைந்த போலீஸார், கிளர்ச்சியாளர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.