வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (16/06/2018)

கடைசி தொடர்பு:21:20 (16/06/2018)

பாம்பன் குந்துகாலில் அமைகிறது மீன் இறங்குதளம்; அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

20,000க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கான மீன் இறங்குதளம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் மணிகண்டன் இன்று தொடங்கிவைத்தார்.

பாம்பன் குந்துகாலில் மீன் இறங்குதளத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம், தனுஷ்கோடி, குந்துகால், ஓலைக்குடா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 17,000 மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தவிர 20,000 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சுமார் 818 விசைப்படகுகள் உள்ளன. இதில் பெரும்பான்மையான படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில் மிகக் குறுகிய தூரத்திலேயே கச்சத்தீவு உள்ளிட்ட இலங்கைக் கடற்பகுதி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள படகுகளின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கவுள்ளதாக மீன் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.  இதைத் தொடர்ந்து குந்துகாலில் மீன் இறங்குதளம் அமைப்பதற்கான பணிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் இன்று அடிக்கல் நாட்டி  தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலை வகித்தார். மீன்துறை அதிகாரிகள், மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

குந்துகால் கடற்கரை பகுதியில் அமைய உள்ள இந்த மீன் இறங்கு தளத்தில் சுமார் 450 விசைப்படகுகள் நிறுத்தப்படும் வகையில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலுக்கு மீனவர்கள் மாறும் நிலை உருவாகும்.