`தெரியாத வேலையைச் செய்யக் கூடாது’ - கமலை சாடும் முத்தரசன்

முத்தரசன்

``நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது" என்று கடுமையாக விமர்சித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட
7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. ராகுல், சோனியா விடுதலை செய்யச் சொல்லியும் மனிதாபிமானம் அடிப்படையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருந்துவருகிறார்கள்.

தூத்துக்குடியில் அமைதி ஏற்படுத்துவதாகச் சொல்லி பொதுமக்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து சிலர்மீது வழக்கு போட்டு வருகிறார்கள். இதைக் கைவிட வேண்டும். தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள். அதைச் சிலர் எதிர்த்துப் போராடுகிறார்கள். அப்படி, போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்றும் அவர்கள்மீது வழக்கு போடுவதும் கண்டிக்கத்தக்கது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இப்படி அடக்கு முறை இல்லை.
 
காவிரி மேலாண்மை வாரியத்தைப் பற்றி அரசு மறந்தேவிட்டது. கபினி அணை நிறைந்து தண்ணீர் வெளியேறுகிறது. அந்த மாநில முதல்வர் இந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியத்தில் தண்ணீர்விடுவது பற்றி பிரச்னை இல்லை என்று உலக மகா நகைச்சுவை செய்கிறார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வருக்கு நன்றி சொல்கிறார். முதலில் நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது. கமல் சிறந்த நடிகர் என்பது எனக்குத் தெரியும். அதற்கு மேல் எனக்குத் தெரியாது.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் பற்றி சமீபத்தில் ஒரே சட்ட புத்தகத்தைப் படித்துவிட்டு 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்கள். இந்த மாதிரியான தீர்ப்பு மக்கள் ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. தாமதிக்கப்படும் நீதி ஜனநாயகத்தைப் பறிக்கும் செயல். ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, அரசு ஸ்திரத்தன்மையை இழந்துவிட்டது. அதனால் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்து விட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

பசுமை வழி சாலை தேவையில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் மக்கள் போக வேண்டிய தேவை இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த தேவை இருக்கலாம். திரைப்படத்தில் கூலி தொழிலாளிகளுக்காகப் போராடி கூலி உயர்வு பெற்று தருவார். நிஜத்தில் போராடினால் நாடு நாசமாகப் போகும் என்கிறார்கள். நடிகர் ரஜினி. அ.தி.மு.க, பா.ஜ.க மூன்று பேரின் குரலும் ஒன்றாக இருக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!