`நீதிமன்றத்தை நாடவும் தயங்க மாட்டோம்!’ - கொதிக்கும் அரியலூர் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழு | Will fight against Methane project in court, says Ariyalur People

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (16/06/2018)

கடைசி தொடர்பு:21:30 (16/06/2018)

`நீதிமன்றத்தை நாடவும் தயங்க மாட்டோம்!’ - கொதிக்கும் அரியலூர் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் குழு

அரியலூரில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளதாக மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

                                  

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள குருவாலப்பர்கோவில், வீரசோழபுரம், கரைமேடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஓஎன்ஜிசி மூலம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிகள் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டம் விவசாயத்தைப் பாதிப்பதோடு விளைநிலம் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வகையில் உள்ளதால், இதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்புக் குழு, பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தை குருவாலப்பர் கோவில் கிராமத்தில் நடத்தினர்.

                                

இத்திட்டதினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஒன்று சேர்ந்த போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.    இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் போராட்டங்கள் நடத்தவும், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தி கிராம சபை கூட்டங்களில் இத்திட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

``அரியலூர் மாவட்டம் விவசாயத்தை நம்பியே உள்ளது. பெரும்பாலும் மானாவாரி பயிர்களே சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, இத்திட்டத்துக்கு எதிராக அரியலூர் மாவட்ட மக்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்குத் தமிழக மக்கள் இணைந்து நிற்பார்கள் என நம்புகிறோம். எனவே, இம்மாவட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடாது என நம்புகிறோம். இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. தேவைபட்டால் நீதிமன்றத்தையும் நாட தயாராக உள்ளோம்’’ எனப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.