"எங்களை மிரட்டுகிறார் நாமக்கல் மயில் சுந்தரம்!" - தனியார் கேபிள் நிறுவனங்களின் புகார் | Private cable companies blame namakkal dco mayil sundaram

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (16/06/2018)

கடைசி தொடர்பு:20:53 (16/06/2018)

"எங்களை மிரட்டுகிறார் நாமக்கல் மயில் சுந்தரம்!" - தனியார் கேபிள் நிறுவனங்களின் புகார்

மிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்கள் மற்றும் லோக்கல் டி.வி. சேனல்கள் செயல்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்கள், லோக்கல் டி.வி. சேனல்களை உள்ளே நுழைய விடாமல் ஒரு தாதாவைப்போல் தடுத்து வருவதோடு, அரசுக்கு மிகப்பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தி வருவதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த மயில் சுந்தரம் மீது புகார் எழுந்துள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மயிலுக்குப் பொன்னாடை போர்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கேபிள்

`கேபிள் காஸ்ட் நியூ மீடியா' என்ற தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனத்தின் பிரதிநிதி நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் சேவையைத் தொடங்குவதற்கு `ஆப்டிக்கல் கேபிள்' (optical cable) இணைப்பு செய்தபோது அவரிடம் தொலைபேசியில் பேசிய மயில் சுந்தரம், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷூம், அமைச்சர் தங்கமணியும் சொல்லியிருக்கிறார்கள். என்னை மீறி நாமக்கல் மாவட்டத்தில் எந்த ஒரு டிஜிட்டல் கேபிள் நிறுவனமும் வர முடியாது. மீறி வந்தால் கேபிள் ஒயர்களை வெட்டி வீசுவேன்'' என்று மிரட்டினாராம். இதன் ஆடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி `கேபிள் காஸ்ட் நியூ மீடியா' நிறுவனத்தின் திருச்செங்கோடு பிரதிநிதி சின்னதுரை, ``இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் இரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேபிள் டி.வி. ஒளிபரப்புச் சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். அவ்வாறு பல நிறுவனங்கள் மூலமாக சேவை வழங்கப்படும் போதுதான், மக்களுக்குத் தரமான மேம்பட்ட சேவை கிடைக்கும் எனத் தகவல் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்  அரசு டிஜிட்டல் கேபிள் நிறுவனத்தைப் போல தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்களும் செட்டாப் பாக்ஸ் வழங்கி, 300 முதல் 400 டி.வி. சேனல்களை ஒளிபரப்பி வருகின்றன. தவிர, அந்தந்த மாவட்ட லோக்கல் தனியார் டி.வி., சேனல்களும் தங்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

குறிப்பாக, முதல்வரின் சேலம் மாவட்டத்திலேயே சி.டி.,என்., டி.சி.சி.எல்., கேபிள் காஸ்ட், அக்‌ஷயா, எஸ்.சி.வி. என 5 தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்களும், பாலிமர், சி.டி.என்., சிட்டி, ஜவஹர், தீபம், அம்மன், எஸ்.கே., எனப் பல லோக்கல் சேனல்களும் தங்களின் ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. ஈரோட்டில் டிஜிகாம், பாலிமர், சி.டி.என்., அக்‌ஷயா, கேபிள் காஸ்ட், எஸ்.சி.வி. ஆகிய தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்களும், ஆர்.சி.என்., கிருஷ்ணா, பாபா, ஏ.எம்.என்., 6 டி.வி., டாப் டி.வி. உள்ளிட்ட லோக்கல் சேனல்களும் தங்களின் ஒளிபரப்பை மேற்கொண்டிருக்கின்றன. இதேபோல் கரூரிலும் பல்வேறு டிஜிட்டல் மற்றும் லோக்கல் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனத்தைக்கூட நுழையவிடாமல் எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர் மயில் சுந்தரம் அராஜகம் செய்கிறார். பொன்மனம், ராயல், ரெயின்போ போன்ற 3 லோக்கல் சேனல்கள் உள்ளன. அந்த மூன்று சேனல்களுமே மயில் சுந்தரத்தினுடையதுதான். நான் திருச்செங்கோடு அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருக்கிறேன். திருச்செங்கோட்டில் கேபிள் காஸ்ட் டிஜிட்டல் கேபிள் நிறுவனம் தொடங்குவதற்காக ஆப்டிக் ஒயர் இணைப்பு செய்தேன். தாசில்தார் கூறியதாக என்னிடம் மயில் சுந்தரம் செல்போனில் பேசி, `ஒயர் போடக் கூடாது; நான் பிரபல டி.வி ஓனரையே உள்ளே விடவில்லை. நீ நம்ம கட்சிக்காரன் என்பதால் பேசுகிறேன். இல்லையென்றால் நடப்பதே வேறு. மீறி ஒயர் இணைப்பு கொடுத்தால், அவற்றை வெட்டி விடுவேன்' என மிரட்டினார். மயில் சுந்தரம்மீது இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், இன்றுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.

மயில் சுந்தரம்

`நாமக்கல் மாவட்டத்துக்குள் தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்கள் வராமல் மயில் சுந்தரம் தடுக்க என்ன காரணம்?' என்று சில கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் கேட்டோம். ``இந்த மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சம் அரசு கேபிள் இணைப்புகள் இருக்கின்றன.  நாமக்கல் டி.சி.ஓ.-வாக மயில் சுந்தரம் இருப்பதால் ஒரு இணைப்புக்கு 10 ரூபாய் வீதம் 5 லட்சம் இணைப்புக்கு 50 லட்சம் ரூபாயை ஆபரேட்டர்களிடம் மாதந்தோறும் வாங்குகிறார். அது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் கேரேஜ் தொகையாக மாதந்தோறும் 5 லட்சம் ரூபாய் வாங்குகிறார். மூன்று லோக்கல் டி.வி. சேனல்கள் மூலம் மொத்த விளம்பரத்தையும் இவருடையே டி.வி.-க்களிலேயே ஒளிபரப்பி மாதம் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். அந்த வகையில் மொத்தமாக 75 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கிறார். அதனால் மற்ற தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்களை உள்ளே வரவிடாமல் தடுக்கிறார். இவர், அ.தி.மு.க.-வில் எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அமைச்சர் தங்கமணி கண் எதிரிலேயே மாவட்ட மாணவரணிச் செயலாளர் சந்திரமோகனை அடித்து, அவரின் மண்டையை உடைத்ததால் ஜெயலலிதா இருந்தபோது, மயில் சுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக்கி வைத்தார். தற்போது நாமக்கல் எம்.எல்.ஏ., பாஸ்கரனோடு நெருக்கமாக இருந்து வருகிறார்'' என்றார்கள்.

இதுபற்றி நாமக்கல் டி.சி.ஓ.,மயில் சுந்தரத்திடம் கேட்டபோது, ``நான் தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்களைத் தடுக்கவில்லை. அவர்கள் தாராளமாக வந்து, தனியாக கேபிள் இணைப்புக் கொடுத்து தொழில் நடத்தட்டும். ஆனால், அரசு கேபிள் இணைப்பில் கொடுக்க முடியாது. ஏற்கெனவே நாமக்கல்லில் 427 ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 200-க்கும் மேற்பட்ட இணைப்புகளைக் கொடுத்து தொழில் செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, புதிதாக ஒருவரை எப்படி உள்ளே அனுமதிக்க முடியும்? அப்படி அனுமதித்தால் ஏற்கெனவே உள்ள ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

அவர்கள் உள்ளே வந்து ரூ.100-க்கும், ரூ. 50-க்கும் சேனல் காட்டுவதாகச் சொன்னால் அரசு கேபிள் நிறுவனம் என்னவாகும்? எனக்கு ஆபரேட்டர்களின் நலன் முக்கியம். அதனால்தான் தடுக்கிறோம். ஆபரேட்டர்கள் யாரும் எனக்குப் பணம் தருவதில்லை. நேரடியாக அவர்கள் வங்கியில் அரசுக்குப் பணத்தைச் செலுத்துகிறார்கள். நான் அமைச்சரின் பெயரைச் சொல்லியோ, முதல்வரின் குடும்பத்தினர் பெயரைச் சொல்லியோ மிரட்டவில்லை. நாமக்கல் நகராட்சியில் மூன்று லோக்கல் சேனல்கள் ஓடுகின்றன. அது என்னுடையது அல்ல. கேபிள் காஸ்ட் நிறுவனத்தின் ஒயர்களை இணைப்பதாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த எங்க கட்சிக்காரன் சொன்னான். அரசு கேபிளோடு இணைக்கக் கூடாதுன்னு மட்டும்தான் சொன்னேன்'' என்றார்.

இதுபற்றி நாமக்கல் மாவட்ட கேபிள் தாசில்தார் சசிகலாவிடம் பேசியபோது, ``தனியார் டிஜிட்டல் கேபிள் நிறுவனங்கள் வரவில்லை என்பதைப் பற்றி நான் எப்படிப் பேச முடியும். நான் அரசு கேபிள் நிறுவனத்தின் தாசில்தார். அரசு கேபிள் இணைப்பில் அதிக வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும் என்றுதான் நான் கருதுவேன். லோக்கல் டி.வி. சேனல்கள், நாமக்கல் நகராட்சியில் மூன்று உள்ளன. மற்றபடி தாலுகா அளவில் சேலத்தைவிட அதிக அளவு லோக்கல் சேனல்கள் இருக்கின்றன. நாமக்கல் நகராட்சியில் லோக்கல் சேனல்கள் வரவில்லை என்றால் அவர்கள் மாவட்ட அளவில் டெண்டர் எடுத்திருக்க மாட்டார்கள்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்