வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (17/06/2018)

கடைசி தொடர்பு:09:30 (17/06/2018)

`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்!

அதிமுகவை போல திமுகவும் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், சேதப்படுத்தியும் கொடிக்கம்பங்களை நட்டுவைத்துள்ளதை அறப்போர் இயக்கம் வெளிகொண்டுவந்துள்ளது. 

நடைபாதையை ஆக்கிரமித்து திமுக கொடி

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்கப் பேனர், கட் அவுட் கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. நீதிமன்றம் தடை உத்தரவை நீக்கிய பின்பு இது மீண்டும் படுஜோராக செயல்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இந்தக் கலாச்சாரம் எல்லை மீறும் வகையில் இருக்கும். அதாவது, சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் - அவுட்களும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்படும். அதற்காக நடைபாதைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை வாசிகள் அடிக்கடி பார்க்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் சரி, அவர் மறைந்த பின்னும் சரி, அதிமுக தலைவர்களை வரவேற்க இந்த மாதிரி சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இதுகுறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதேபோல் மேலும் ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை சிக்கியிருப்பது திமுக. இதனை அறப்போர் இயக்கம் வெளிகொண்டுவந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு நடந்தது. இதற்காக சென்னை ஈகா தியேட்டர் - கோயம்பேடு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், சேதப்படுத்தியும் கட் -  அவுட்களும், கொடிக் கம்பங்களும் நடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் ட்விட்டரில் ஸ்டாலினை டேக் செய்து,  ``புதிய கிரானைட் நடைபாதையைச் சேதப்படுத்தி கொடிக் கம்பங்கள் நட்டியுள்ளதற்கு நன்றி. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது" எனப் பதிவிடப்பட்டுள்ளது. 

இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவ திமுகவுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே, இந்தப் பதிவை பார்த்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,  ``நடந்த சிரமத்திற்கு மன்னிக்கவும். எங்களால் ஏற்பட்ட சேதத்தை எங்கள் கட்சி தொண்டர்கள் சரி செய்வார்கள். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாது. சேதங்களைச் சரி செய்த புகைப்படம் விரைவில் பதிவிடப்படும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் உள்ளது எங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்." எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க