ஆணாக மாறி திருமணம் செய்த பெண் - உண்மை தெரிந்ததால் தற்கொலை!

ஆணாக மாறி பெண்ணையே திருமணம் செய்த பெண் குறித்த உண்மை தெரிய வந்ததால் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி, வயது  26. இவர், புதுச்சேரி, கிருமாம்பாக்கத்தில் இயங்கி வரும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு  எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) பணியாற்றிக் கொண்டிருந்தார். அதேபோல திருச்செந்தூரைச் சேர்ந்த அக்‌ஷய்தேவ் என்பவர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் முதலில் நட்பாகப் பழகி பிறகு ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் அக்‌ஷய்தேவுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. போகப்போகச் சரியாகிவிடும் என நினைத்த இளவரசிக்கு நாளடைவில் அக்‌ஷய்தேவ் மீது சந்தேகம் வந்திருக்கிறது. ஒரு நாள் பணிக்கு செல்வதாகச் சொல்லிவிட்டு அக்‌ஷய்தேவுக்குத் தெரியாமல் ரகசியமாக வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்திருக்கிறார் இளவரசி. அப்போது அக்‌ஷய்தேவின் உடலில் பல வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதன்பின் அக்‌ஷய்தேவிடம் கோபமாக விசாரித்திருக்கிறார் இளவரசி. அப்போது அக்‌ஷய்தேவ் ஒரு பெண் என்பதும், அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி திருமணம் செய்தது தெரியவர அதிர்ச்சியில் உறைந்தார் இளவரசி.

தற்கொலை

அதிலிருந்து அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார் இளவரசி. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தங்களது திருமண நாளையொட்டி இளவரசியை அவர் வேலை செய்யும் அழகு நிலையத்தில் சந்தித்த அக்‌ஷய்தேவ், இருவரும் சேர்ந்து வாழலாம் என வற்புறுத்தி உள்ளார். ஆனால், அதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. அதில் விரக்தியடைந்த அக்‌ஷய்தேவ், பாட்டிலில் தயாராக எடுத்துச் சென்ற பெட்ரோலை தனது உடலில் ஊற்றித் தீவைத்து கொண்டார். பெட்ரோல் என்பதால் தீ மின்னல் வேகத்தில் உடல் முழுவதும் பரவி எரிந்தது. அதனால் வலி தாங்காமல் அலறித் துடித்த அக்‌ஷய் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டுள்ளார். உடனே இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்குச் சென்ற கிருமாம்பாக்கம் போலீஸார் அவரை மீட்டு அவர் வேலை பார்த்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சேர்த்தனர்.  பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் முழுவதும் 65% தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குச் சிகிச்சை பெற்றுவந்த அக்‌ஷய்தேவ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் உயிரிழந்தார். பெண்ணாக இருந்து ஆணாக மாறி திருமணம் செய்து கொண்ட அக்‌ஷய்தேவ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!