திருநங்கைகள் குறித்த பதிவும்..கஸ்தூரி, கிரேஸ் பானுவின் விளக்கமும்!

திருநங்கைகள் குறித்த பதிவும்..கஸ்தூரி, கிரேஸ் பானுவின் விளக்கமும்!

தினெட்டு எம்.எல்.ஏ -க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை. இரு வேறுபட்டுத் தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! அப்போ, 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!" எனப் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவோடு இரண்டு திருநங்கைகளின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். அந்தப் பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். நேற்று நடிகை கஸ்தூரியின் வீட்டைத் திருநங்கைகள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதை அடுத்து, திருநங்கை சமூகப் போராளி கிரேஸ் பானுவிடம் பேசினோம்.

கஸ்தூரியின் பதிவு

 

“அவங்க அந்தப் பதிவைப் போட்ட உடனே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த வருட மிஸ் கூவாகம் போட்டியின் ஸ்பெஷல் கெஸ்ட்டா அவங்க தான் வந்திருந்தாங்க. அங்கே டிரான்ஸ்போஃபியா பற்றியெல்லாம் பேசினாங்க. ஒரு பிரிவினர் உங்க மேல நம்பிக்கை வெச்சுதான் அந்த நிகழ்ச்சிக்கு உங்களைக் கூப்பிட்டிருக்காங்க. அந்தப் பிரிவினரை நீங்கக் காயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதுதான் டிரான்ஸ்போஃபியா. டிரான்ஸ்போஃபியான்னா என்னன்னே தெரியாதவங்க ஏன் அதைப்பற்றிப் பேசுறாங்க. அரசியல் பேசுறோம்னு நினைச்சிட்டு அவங்களைப் பிரபலப்படுத்திக்க எங்களை ஏன் பயன்படுத்துறாங்க. அவங்க அப்படிப் பதிவு போட்ட உடனேயே, "கஸ்தூரி உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்க டிரான்ஸ் கம்யூனிட்டிக்கு சப்போர்ட் பண்றவங்க. ஆனா, ஏன் இப்படியொரு பதிவைப் போட்டுருக்கீங்க. ஒருவேளை, நீங்க சொல்ல வர்ற விஷயத்தை நான் தப்பா புரிஞ்சிருக்கலாம். இந்தப் பதிவிற்கான விளக்கத்தைக் கொடுங்க'ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'எனக்கு ஹியூமர் சென்ஸ் நிறைய இருக்கு. அப்படித்தான் இந்தப் பதிவைப் போட்டேன். நான் யாரையாச்சும் ஹார்ட் பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க. ஒரு சில பொறுப்புப் போராளிங்க இந்த மாதிரி திரியுறாங்க'ன்னு சொன்னாங்க.

கிரேஸ் பானு

பொறுப்புப் போராளிங்குற வார்த்தைக்கு அவங்களுக்கு அர்த்தம் தெரியுமா? எங்களுடைய உரிமையைப் பெற நாங்க எவ்வளவு கஷ்டப்படுறோம்னு அவங்களுக்குத் தெரியுமா? ஸ்கூல், காலேஜ்ல இந்தப் பெயர் சொல்லித்தானே எங்களைக் கேவலப்படுத்துறாங்க. இப்போ நாங்க போராடி முன்னுக்கு வந்துட்டு இருக்கிற சமயம் இவங்க அந்த வார்த்தையைக் கிண்டலுக்கு பயன்படுத்துறது மத்தவங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாதிரிதானே. நீங்க எங்களைக் கைப்பிடித்துத் தூக்க வேண்டாம். மறைஞ்சிருக்குற வார்த்தையை மறுபடியும் பயன்படுத்தும்போது அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்த மாதிரிதான் அந்தப் பதிவு இருந்தது. என்னை ஒன்பதுன்னு சொல்றவங்களை நான் செருப்பால அடிப்பேன். அது யாரா இருந்தாலும் என் பதில் அது தான். அவங்க தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டா இது பெரிய விஷயமே இல்ல. மன்னிப்பு கேட்டுட்டு பொறுப்பு போராளிங்கன்னு கிண்டல் பண்ணினா எப்படி விட முடியும். அதனாலதான் எங்க எதிர்ப்பை தெரிவிக்கணும்னு முடிவு பண்ணினோம். இந்த விஷயத்துல நாங்க மட்டும் எங்க எதிர்ப்பைத் தெரிவிக்கலை. எங்களுக்காக நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் கண்டிப்பைத் தெரிவிச்சிருக்காங்க. அவங்களுடைய பதிவை நான் வண்மையா கண்டிக்கிறேன்" என்றார்.

 

இது குறித்து நடிகை கஸ்தூரியிடம் கேட்டதற்கு,

கஸ்தூரி

“நான் போன வருஷம் என் பிறந்த நாளுக்கு என்னையே கலாய்ச்சு ஒரு ட்வீட் போட்டேன். முதல்ல இது திருநங்கைகளை கிண்டல் பண்ணி போட்ட பதிவு இல்ல. அது அந்த மாதிரி தவறான சித்தரிப்பு ஆகிடுச்சு. அது தவறா புரியப்படுதுன்னு தெரிஞ்சதுமே அந்தப் பதிவை எடுத்துட்டேன். ஒரு குறிப்பிட்ட சாரர் அதிகமா இதுக்குப் பொங்குறாங்க. அதுலயும் குறிப்பா ஒரு கட்சியை சேர்ந்தவங்க அதிகமா பொங்குறாங்க. என்னுடைய எல்லா ட்வீட்டுமே நக்கலும், நையாண்டியும் கலந்துதான் இருக்கும். சொல்ல வேண்டிய எல்லா விளக்கத்தையும் நான் ட்விட்டரிலேயே சொல்லியிருக்கேன். எனக்கும் என் தங்கை திருநங்கை ஷிவானிக்கும் அந்தப் பதிவிலேயே கலந்துரையாடல் நடந்துச்சு. அந்தக் கமெண்ட்ஸ் படிச்சாலே உங்களுக்குப் புரியும். அவங்க அதை பெருசா எடுத்துக்கல. என்னைப் புரிஞ்சிக்கிட்டாங்க. அவங்களே, 'நீங்க மாற்றுப் பாலினத்தவர்களுடைய நலனில் அக்கறை உள்ளவங்கன்னு எங்களுக்குத் தெரியும்'னு அந்த கலந்துரையாடல்ல சொல்லிருப்பாங்க. இருந்தாலும், சில சமயம் நாம காமெடியா பண்ணின விஷயம் தப்பா சொதப்பும். அது தப்புன்னு தெரிஞ்சதும் அதை சரி பண்ணிக்கனும். யார் மனசையும் புண்படுத்துறது கண்டிப்பா என் நையாண்டித்தனத்தின் நோக்கம் இல்ல. எனக்கு நிறைய மாற்றுப்பாலின நண்பர்கள் இருக்காங்க. அவங்க வேற, நாங்க வேறன்னுலாம் நான் பார்க்குறது இல்ல. எல்லோரும் சிநேகமாக இருக்கிறோம். வெளிப்படையா ஜாலியான கமெண்ட்ஸை எங்களுக்குள்ள நாங்க அடிச்சிக்கிறது வழக்கம். ஆனா, அதையே பொது வெளியில் சொன்னா அது தவறு. அந்தத் தவறை உடனடியா நான் திருத்திக்கிட்டேன். என் ஃப்ரண்ட்ஸ் புரிஞ்சிகிட்டாங்க. எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல. இதைப் பிரச்சனையா பெரிதுபடுத்துறது வேற ஒரு குரூப். அதனால இதைப் பெரிதுபண்ணாம விட்டுருங்க" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!