`கடலில் இருந்த மகிழ்ச்சி; கரை திரும்பியதும் வருத்தமாக மாறியது' - ராமேஸ்வரம் மீனவர்கள் சோகம்!

 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்துக்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் அதிகளவில் இறால் மீன் கிடைத்தும், உரிய விலை கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர்.

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்துக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிகளவில் இறால் மீன் கிடைத்தும், உரிய விலை கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளனர்.

மீனவர்கள்

வங்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தினை அதிகரிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான கடல் பகுதியில் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி துவங்கிய தடைக்காலம் கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் நேற்று மீன்பிடிக்கச் சென்றன. வழக்கம் போல் பாக் நீரினை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்ற சிறு படகுகளுக்கு 100 முதல் 150 கிலோ வரையிலான இறால் மீன்களும், பெரிய படகுகளுக்கு 200 முதல் 300 கிலோ வரையில் இறால் மீன்களும் கிடைத்தது. 

கடலில் பாய்ச்சிய வலைகளில் சிக்கிய இறால் மீன்களைக் கண்ட மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி கரை திரும்பியது வருத்தமாக மாறியது. இதற்குக் காரணம் மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்களுக்கு ஏற்றுமதி கம்பெனிகள் உரிய விலை கொடுக்காமல் குறைந்த விலையை நிர்ணயித்ததே ஆகும். 61 நாட்கள் வருமானம் இல்லாத நிலையில் கடன் வாங்கி படகுகள், வலைகளைச் சீரமைத்ததுடன் அதிகரித்து வரும் டீசல் விலையினையும் தாங்கி கொண்டு அதிக மீன்கள் கிடைக்கும், போதுமான வருமானம் வரும் என்ற எதிர்பார்ப்புடன் கடலுக்கு சென்றிருந்தனர் மீனவர்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏற்றுமதி நிறுவனங்கள் குறைவான விலைக்கே இறால் மீன்களைக் கொள்முதல் செய்தனர். இதனால் வழக்கத்திற்கு மாறாகப் பல மடங்கு மீன்பிடித்து வந்தும் மீனவர்களுக்கு வருத்தத்தையே தந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!