ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 4 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்! | 4 child marriages stopped in Ramnad district

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (17/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (17/06/2018)

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 4 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  நடைபெற  இருந்த  4   குழந்தை  திருமணங்களை  அதிகாரிகளும், சைல்டுலைன் அமைப்பினரும்  தடுத்து  நிறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  நடைபெற  இருந்த  4   குழந்தை  திருமணம்  அதிகாரிகள் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர்  தடுத்து  நிறுத்தியுள்ளனர்.

குழந்தைத் திருமணம்
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக  குழந்தை திருமணங்கள் அதிக அளவு நிச்சயக்கப்பட்டு வருகின்றன. முகூர்த்த நாள்களின் போதுதான் இதுபோன்ற தகவல்கள் போலீஸாருக்கோ, சமூக நலத்துறையினருக்கோ  தெரிய வருகிறது. இதனால் திருமணம் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் அதிகாரிகள் கடைசி நேரத்தில் சட்டத்திற்கு புறம்பான திருமணங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் இதுபோன்று 4 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியில் வசித்து வரும் 15 வயதுச் சிறுமிக்கும், ஏர்வாடி அருகே வெட்டமனை கிராமத்தைச் சேர்ந்த  பீமராஜ் மகன் ஜெயக்குமார்(29) என்பவருக்கும்  ஞாயிற்றுக்கிழமை சிறுமி வீட்டில் திருமணம் நடக்க  இருந்தது. இதேபோல பரமக்குடியில் 16 வயது சிறுமிக்கும் பரமக்குடி அருகே எலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நிறைதளம் மகன் செல்லமுத்துவுக்கும் (28) ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது.ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும்  கரைமேல்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் மருது மகன் விஸ்வநாதன் (26) என்பவருக்கும்  அக்கிராமத்தில் உள்ள உச்சநத்தி அம்மன் கோயிலில் திருணம் நடக்க இருந்தது.

 இம்மூன்று  குழந்தை  திருமணங்களும்  நடக்க இருப்பதாக ராமநாதபுரம் சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி தலைமையில் சமூகநலத்துறை இளநிலை உதவியாளர் பாண்டியன்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் சமூகப்பணியாளர் மகேசுவரன், மனிதவர்த்தகக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை  அதிகாரிகள் மற்றும் சைல்டுலைன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்பதை எடுத்துக்கூறி அத்திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட தொண்டியில் 17வயதுச் சிறுமிக்கும் முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சமயதேவன்(24)என்பவருக்கும் முள்ளிமுனை கிராமத்தில் திருமணம் நடக்க இருப்பதாக ஹலோ போலீஸாருக்கு தகவல் வந்தது.

 இத்தகவலின் பேரில் சைல்டுலைன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ்,தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் அமிர்தநளாயினி மற்றும் அதிகாரிகள்  சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த முகூர்த்த நாளின் போது ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற திருமணங்கள் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்படுவதால் பல்வேறு சிரமங்களை திருமண வீட்டார் மட்டும் இன்றி அதிகாரிகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே குழந்தை திருமணங்கள் குறித்து கிராம பகுதிகளில் போதிய விழிப்புஉணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.