`இப்படி பேசுபவர்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான்!’ - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் | Minister Jayakumar speaks about arrest of actor Mansoor Ali Khan

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (17/06/2018)

கடைசி தொடர்பு:18:20 (17/06/2018)

`இப்படி பேசுபவர்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான்!’ - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.

வன்முறையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும், அதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்கான படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` பல்வேறு நாடுகளை போல பிளாஸ்டிக் இல்லாத சூழலை ஏற்படுத்த தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் கடல் பகுதி மாசுபடுவதுடன், மீன்கள் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுவதாக கூறினார். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணிகளை ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

அப்போது அவரிடம் நடிகர் மன்சூர் அலிகான் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``வன்முறையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும், அதை ஏற்க முடியாது. யாராக இருந்தாலும் சரி ஒரு வரைமுறையோடுதான் பேச வேண்டும். கையை வெட்டுவது, காலை வெட்டுவது, குத்திவிடுவேன், கொலை பண்ணிவிடுவேன் என்கிற ரீதியில் பேசுவது பேச்சே கிடையாது. அப்படி பேசுவது தவறு. இப்படி பேசுபவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதான்’’ என்றார். சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.


[X] Close

[X] Close