`ஸ்டெர்லைட் ஆலையில் சிறிய அளவிலேயே ரசாயனக் கசிவு; மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!’ - ஆட்சியர் தகவல் | Government officials to inspect thoothukudi Sterlite industry, says Collector

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (17/06/2018)

கடைசி தொடர்பு:19:04 (17/06/2018)

`ஸ்டெர்லைட் ஆலையில் சிறிய அளவிலேயே ரசாயனக் கசிவு; மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!’ - ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமில கிடங்கில் சிறிய கசிவு மட்டுமே ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, " ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு  ஆகியவை துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே-28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி, இந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றே ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. 

ஸ்டெர்லைட் ஆலை நூறு சதவீதம் மூடப்பட்டுவிட்டது என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். ஆனால், இந்த ஆலையின் மெயின் வாசல் தவிர்த்து கார், வேன் போன்ற வாகனங்கள் ஆலைக்குள்  சென்று வருகிறது என சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தவறானவை. அத்துடன் ஆலையில் ரசாயனங்கள் நிறைந்த யூனிட்டுகள் உள்ளன. இதில், ரசாயன வாயுக்ககசிவு வெளியாகிறது என்ற  தகவல்களும் வெளியாகின. 

இத் தகவலின் அடிப்படையில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட உள்ளனர். வாயுக் கசிவு ஏற்பட்டிருப்பின் அதன் தன்மை, நிலை குறித்து ஆய்வு செய்து அதனை எப்படி சரி செய்வது? என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலை

ஆலைக்குள் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதிகாரிகளின் ஆய்வு குறித்து  வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக வளைதளங்களில் எதிர்மறையாக பரப்பப்படும்  தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற உறுதியற்ற, தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கையைப் பற்றிப் பிறகு தெரிவிக்கப்படும்." என்றார். ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்வதால், ஆலையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கந்தக அமில கிடங்கில் சிறிய கசிவு மட்டுமே ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. நாளை ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை டேங்கர் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க