வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (18/06/2018)

கடைசி தொடர்பு:07:44 (18/06/2018)

ஆப்கானில் மனித வெடிகுண்டு தாக்குதல்! 18 பேர் பலி

துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்த தாலிபன் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பிற்குப் பிறகு தற்காலிகமாகத் தங்கள் தாக்குதலை நிறுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ரமலான் விடுமுறை முடிவதற்குள் ஆப்கான் மக்களின் கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த நாட்டில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஜலாலபாத் நகரத்திலிருக்கும் நாங்கர்ஹார் மாகாண கவர்னர் அலுவலகத்தின் முன்பு நடந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிறு இரவு (17-06-2018) நடந்த தாக்குதலில் 18 பேர் பலியானதோடு 49 பேர் காயமடைந்துள்ளனர்.

மனித வெடிகுண்டு

காயமடைந்தவர்களில் பெரும்பாலோனோர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக நாங்கர்ஹார் சுகாதாரத்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) தாலிபன்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 36 பேர் இறந்தும், 65 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட தீவிரவாதிகளே இதற்கும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஆனால், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கான ஆப்கான் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருந்த தாலிபன் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பிற்குப் பிறகு தற்காலிகமாகத் தங்கள் தாக்குதலை நிறுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். மக்கள் அமைதியாக ரமலான் கொண்டாட வேண்டுமென்பதற்காகத் தற்காலிகமாக இடத்தைக் காலிசெய்துவிட்டுச் சென்ற ராணுவ வீரர்கள் தற்போது விரைந்துகொண்டிருக்கிறார்கள். தாக்குதலை நிறுத்திக்கொள்வதாகச் சொல்லியுள்ள தாலிபன் தீவிரவாதிகள் அதை மூன்று நாள்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.