வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (18/06/2018)

கடைசி தொடர்பு:10:27 (18/06/2018)

`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா?' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்கும் விதமாக ஸ்ரீ ராம் சேனா தலைவர் பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. 

மோடி

கர்நாடகா மாநிலம் பெங்களூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதியன்று மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்ததே கொல்லப்பட்டதற்கான காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. 

இதற்கு, ஸ்ரீ ராம் சேனா அமைப்புத் தலைவர் பிரமோத் முத்தாலிக், `கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பகுத்தறிவுவாதிகள், பத்திரிகையாளர்கள் என நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைபற்றி, யாரும் கேள்வி எழுப்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி என்று விமர்சிக்கவில்லை. ஆனால், கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேச மறுக்கிறார்? இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காத்துவருவது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா என்ன?' என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, கெளரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராமை என்பவரை, சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தது. தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஐ.டி வட்டாரம் தெரிவித்துள்ளது.