ஜப்பானை கலங்கடித்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை; பீதியில் மக்கள் | A strong earthquake has hit Japan's Osaka region

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (18/06/2018)

கடைசி தொடர்பு:10:44 (18/06/2018)

ஜப்பானை கலங்கடித்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை; பீதியில் மக்கள்

ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஒரு குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கம்

ஜப்பான், ஓசாகா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் பீதியில் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் சுவர் இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு நகரில் 9 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். நிலநடுக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 41 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. பல இடங்களில் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ரயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அந்நாட்டுப் பிரதமர், சின்சோ அபே, “மக்களைக் காப்பாற்றுவதே அரசின் முதன்மையான நோக்கம். இதில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், சேதம் குறித்த தகவல்களை உடனடியாக சேகரிக்கவும் மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.