பல மாதங்களாகப் போராட்டம்...நொடிப்பொழுதில் டாஸ்மாக்கை காலிசெய்த கொள்ளையன்... மகிழ்ச்சியில் மக்கள்

பலமுறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மதுக்கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கொள்ளையன் உள்ளே நுழைந்து மதுபானக் கடையை முற்றிலுமாக எரித்த பிறகாவது அந்த இடத்திலிருந்து கடை அகற்றப்படுமா? என்கிற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். அதனால் ஒட்டுமொத்த கடையநல்லூர் மக்களுமே மதுக்கடையை எரித்த கொள்ளையனை மனதார வாழ்த்துகிறார்கள்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் போராடி வந்த நிலையில், அந்தக் கடையின் உள்ளே நுழைந்த கொள்ளையன், அங்கு பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கடையை தீ வைத்துக் கொளுத்திவிட்டுச் சென்று விட்டான். இதில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் சேதமடைந்தன.

மதுக்கடை எரிப்பு- பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம், மேலக்கடையநல்லூரில் டாஸ்மாக் மதுபானக் கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கடை அமைந்திருக்கும் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. அதனால், அந்தப் பகுதிக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் குடிமகன்களால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன், கபாலீஸ்வரன் ஆலயமும் அந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது. அதனால் பக்தர்களும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அடிக்கடி சென்று வரக்கூடிய பகுதியிலிருந்து கடையை அகற்ற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடையநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வான முகமது அபுபக்கர் தலைமையில் கடந்த மாதத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அத்துடன், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கடையை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்த நிலையில், இன்று அதிகாலை அந்தக் கடையின் அருகில் உள்ள பார் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த நபர் சுவரில் ஒரு அடி அகலத்துக்கு டிரிலிங் மிஷினை வைத்து துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளான். கடையின் மேஜையை உடைத்து உள்ளே பார்த்தபோது பணம் எதுவும் இல்லை. டாஸ்மாக் ஊழியர்கள் வசூலான தொகையை எடுத்துச் சென்றுவிட்டதால் பணம் கிடைக்காத கொள்ளையன், ஆத்திரத்தில் கடைக்குத் தீவைத்து விட்டு தப்பிச் சென்றான்.

டாஸ்மாக் கடையில் தீ பற்றி எரிவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்ததால் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தார்கள். அந்தக் கடையில் முதல் நாளில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் லாரியிலிருந்து இறக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், கடையில் ஏற்கெனவே சரக்குகள் இருந்ததால் மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

பலமுறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மதுக்கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கொள்ளையன் உள்ளே நுழைந்து மதுபானக் கடையை முற்றிலுமாக எரித்த பிறகாவது அந்த இடத்திலிருந்து கடை அகற்றப்படுமா? என்கிற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். அதனால் ஒட்டுமொத்த கடையநல்லூர் மக்களுமே மதுக்கடையை எரித்த கொள்ளையனை மனதார வாழ்த்துகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!