வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (18/06/2018)

கடைசி தொடர்பு:12:20 (18/06/2018)

தமிழர்கள் 2 பேரின் உயிரைப் பறித்த செல்ஃபி! கோவா கடலில் நடந்த சோகம்

கோவாவில் சுற்றுலாவுக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இவர்கள் செல்ஃபி எடுப்பதற்காகக் கடலில் இறங்கியபோது அலையில் சிக்கி உயிரிழந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவா

இதுகுறித்து காவலர் ஜிவ்பா டால்வி (Jivba Dalvi) கூறுகையில், `தமிழ்நாடு, வேலூரைச் சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் சுற்றுலாவுக்காக கோவா வந்துள்ளார். இவர்கள் வடக்கு கோவாவில் உள்ள, பாகா கடற்கரையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அவர்கள் செல்ஃபி எடுப்பதற்காகக் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது, எழுந்த ராட்சச அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்றது. அதில், தினேஷ்குமாருடன் வந்த 2 பேர் பத்திரமாக மீண்டு வந்தனர். ஆனால், அலையில் சிக்கிய தினேஷ் குமார் உயிரிழந்தார். இவரது, உடல் கரை ஒதுங்கியபின் கண்டெடுக்கப்பட்டது.

இதேபோல், வடக்கு கோவாவில் மற்றொரு கடற்கரையான சின்கர்னிம் பீச்சில், சுற்றுலா வந்த தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார் வாசன் என்பவர், செல்ஃபி எடுத்துக்கொள்ள கடலில் இறங்கியுள்ளார். அவரும், அலையில் இழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர்கள் ஆபத்தையும் உணராமல் செஃல்பி எடுத்துக்கொள்வதற்காக இப்படியான விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். 

அலையில் சிக்கி மரணமடைந்த தினேஷ் குமார், சசிகுமார் வாசன் உடல்கள் உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்' என கூறினார்.