வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (18/06/2018)

கடைசி தொடர்பு:12:43 (18/06/2018)

'நீங்க வந்தால்தான் சரி செய்கிறார்கள்'- முதல்வரை அழைக்கும் நாஞ்சிக்கோட்டை மக்கள்

முதல்வர் வரும் வழியில் சரி செய்யப்படுகிறது சாலைகள். ஆனால் மக்கள் பயன்படுத்தும் சாலைகள் பல ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் மக்கள்

காவிரிக்கான  உரிமையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றதைக் கொண்டாடும் விதமாக  நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக கடந்த பத்து தினங்களுக்கு மேலாக சரியாக இருந்த சாலைகள்கூட சரி செய்யபட்டு சுத்தம் செய்யப்பட்டன. ஆனால், மக்கள் பயன்படுத்தும் சாலை பல ஆண்டுகளாக பல்லாங்குழியைவிட மோசமாக இருந்தும் சரி செய்யாமல் அலட்சியம் காட்டப்படுகிறது. முதல்வருக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா என  கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நாஞ்சிக்கோட்டை சாலை

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மேரீஸ்கார்னர் வழியாக செல்கிறது நாஞ்சிக்கோட்டை சாலை. இதன் குறுக்கேதான் சர்ச்சைக்குரிய புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. முறையாக இந்தப் பாலம் கட்டப்படவில்லை என இப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்த நிலையில், பாலத்தின் கீழ் செல்லும் நாஞ்சிக்கோட்டை சாலை நகரத்தை ஒட்டிய பகுதிதான் என்றாலும் பல கிலோ மீட்டருக்கு படு மோசமாக குண்டும் குழியுமாக பல்லாங்குழியைவிட மோசமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை என புகார் வாசிக்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பு பெறப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதமாக  அ.தி.மு.க சார்பில் இன்று மயிலாடுதுறையில் பிரமாண்ட பொதுகூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காவிரி விஷயத்தில் அ.தி.மு.க அரசின் செயல்படுகள் குறித்துப்  பேச உள்ளார். இதில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமி, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக காரில் மயிலாடுதுறை செல்கிறார். இதற்காக கடந்த பத்து தினங்களுக்கு மேலாகவே அவர் வரும் வழியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள்  சரிசெய்யபட்டன.

குண்டும் குழியுமான சாலை

பின்னர் சாலையின் இருபுறமும் இருந்த புதர்கள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், முக்கிய இடத்தில் இருந்த வேகத்தடைகளும் அகற்றபட்டன. இதற்கு முன் திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு முதல்வர் வந்த சமயத்திலும் இதேபோல் செய்தனர் அதிகாரிகள். ஆனால், தஞ்சாவூரில் நகர்ப் பகுதியில் இருக்கு நாஞ்சிக்கோட்டை சாலை பல ஆண்டுகளாக படுமோசமாக இருக்கிறது. இந்த வழியில் வாகனங்களில் செல்வதற்கே முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

வழியெங்கும் ராட்ஸச குழிகள் மற்றும் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. மழை பெய்தால் மழை நீர் குழிகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பல விபத்துகள்  நடக்கிறது. இந்தச் சாலையை சரி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. மக்கள் படும் அவஸ்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில மணி நேரங்கள் செல்லும் முதல்வருக்காக சாலை புதிதாக போடப்படுகிறது. சுத்தம் செய்யப்படுகிறது.

விபத்தை உண்டாக்கும் சாலை

ஆனால், மக்கள் பயன்படுத்தும் சாலையை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. முதல்வர் வந்தால்தான் சாலைகள் சரி செய்யப்படும் என்றால் `எங்க பகுதிக்கும் எதாவது நிகழ்சிக்கு வாங்க முதல்வர் அவர்களே' என கெஞ்சிய நிலையில் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க