`துப்பாக்கிச்சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது!'- தூத்துக்குடியில் மேதா பட்கர் காட்டம்

``தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது. இந்திய நிறுவனம் இல்லாத வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மக்களிடம் நம்பிக்கை தன்மை இழந்துவிட்டது" எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் மேதா பட்கர் குற்றம்சாட்டியுள்ளார். 

மேதா பட்கர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திப்பதற்காக, சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் இந்திய நிறுவனமே அல்ல. கடந்த 1998 முதல் தற்போது வரையிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

பசுமைத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என ஆலைக்கு எதிராக எத்தனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், எதையும் பொருட்படுத்தாமல் இயங்கி வருகிறது இந்த ஆலை. ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் ஆலைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றுச்சூழல் விதிகளை குறைத்துகொண்டே வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையிலும், மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் அனுமதியாவது கிடைத்தது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு  மக்களின் பிரச்னைகள் தெரியவில்லை. மக்களுக்குப் போராட அனுமதியும் கிடைக்கவில்லை.

மக்களின் இந்தப் போராட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கதக்கது. இந்திய நிறுவனம் இல்லாத வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான ஸ்டெர்லைட் நிறுவனம் மக்களிடம் நம்பிக்கைத் தன்மை இழந்துவிட்டது. ரத்தினகிரி, ஒடிசா எனப் பல பகுதிகளிலும் இந்த ஆலைக்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நர்மதா அணை கட்டும் பணியின்போது சுமார் 40,000 மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் எதுவும் புரியாமல் பிரதமர் மோடி நடந்ததுகொண்டதுபோல, தூத்துக்குடியிலும் தற்போது மக்கள்மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தைக் காரணம் காட்டி தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும் போராட்டங்களில் கலந்துகொண்ட கிராம மக்களையும் நேரில் சந்திக்க உள்ளேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!