வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (18/06/2018)

கடைசி தொடர்பு:14:10 (18/06/2018)

`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்!' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கண்டனம் தெரிவித்த மாஜிஸ்திரேட், ஜூலை 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்ததுடன், ஆஜராகி விளக்கமளிக்காவிட்டால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார். 

எஸ்.வி.சேகர்

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கோரினார். இது பற்றி முகநூலில் விமர்சனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பகிர்ந்தார். 

எஸ்.வி.சேகருக்குச் செய்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், இந்த எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவுவிவகாரம் தொடர்பாக நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக, மன்றத்தின் தலைவர் அய்கோ என்கிற அய்.கோபால்சாமி சார்பாக வழக்கறிஞர்கள் டி.ஏ.பிரபாகர், வினோத் தாசன் ஆகியோர் நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், ``முகநூலில் எஸ்.வி.சேகர் வெளியிட்ட பதிவானது பத்திரிகையாளராகிய என் மீதும் என்னைப் போன்றவர்களின் மீதும் அவதூறையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவால், சமூகத்தில் என்னைப் போன்றோரின் மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. இந்த அவதூறு பதிவை வேண்டுமென்றே வெளியிட்டு அவமானத்தை ஏற்படுத்திய எதிர்மனுதாரருக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு நடிகர் எஸ்.வி.சேகருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ராமதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் அதிருப்தியடைந்த மாஜிஸ்திரேட், ஜூலை 12-ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்து, வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.