வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (18/06/2018)

கடைசி தொடர்பு:17:36 (18/06/2018)

`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்

சென்னை சூளைமேடு பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், கனவில் வந்ததால் அவனைக் கொலை செய்த மூன்று பேரும் போலீஸில் சரணடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை சூளைமேடு ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர், பிளாட்பாரத்தில் பழைய புத்தகம் விற்றுவருகிறார். இவரின் மகன் ராஜேஷ். 6-ம் வகுப்பு வரை படித்த இவர், அதற்கு மேல் படிக்கவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிவந்தார்.  இந்த நிலையில், கடந்த ஜனவரி, பொங்கல் தினத்தன்று வீட்டை விட்டு வெளியில் சென்ற ராஜேஷ், பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து  சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். பல இடங்களில் தேடியும் ராஜேஷை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்த நிலையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியனிடம் நேற்று மூன்று சிறுவர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். 

குற்றம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களிடம் சரண் அடைந்த மூன்று பேரும் ராஜேஷின் நண்பர்கள். இதில் இரண்டு சிறுவர்கள் சுடுகாட்டில் குழி தோண்டும் வேலை செய்துவருகின்றனர். மற்றொருவர் வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றிவந்தார். இவர்களில் இரண்டு பேர், போதை பழக்கத்துக்கும் அடிமையாக இருந்தனர். இந்தச் சமயத்தில், பொங்கல் பண்டிகையன்று ராஜேஷ், எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டோம். இதனால், நுங்கம்பாக்கம் மயானப்பகுதிக்கு ராஜேஷை அழைத்துச் சென்றோம். அங்கு பணம் கேட்டதில் எங்களுக்கும் ராஜேஷுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கிரிக்கெட் மட்டையால் ராஜேஷை சரமாரியாகத் தாக்கினோம். அதில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். தொடர்ந்து அங்கு குழிதோண்டி அவரின் சடலத்தை புதைத்துவிட்டோம் என்று மூன்று பேரும் கூறினர்" என்றனர்.

இவ்வளவு நாள் கழித்து எப்படி சரண் அடைந்தீர்கள்? என்று போலீஸார் தனித்தனியாக சிறுவர்களிடம் விசாரித்தபோது, `ராஜேஷை கொலை செய்தபிறகு அவன் அடிக்கடி என் கனவில் வந்ததால், பல இரவுகள் தூங்காமல் தவித்ததாகவும் கூறியுள்ளார் ஒரு சிறுவன். இதனால்தான் சரண் அடையும் முடிவை எடுத்தோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சரண் அடைந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீஸார் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட ராஜேஷின் உடலைத் தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துவருகின்றனர். 

 கொலை செய்யப்பட்ட நண்பர், ஆறுமாதங்களாக கனவில் வந்து தூக்கத்தைக் கெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.