உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழக்கு - வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

சுங்கச்சாவடி உள்ளிட்ட இரண்டு வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வரி செலுத்தாத போராட்டம்  நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அவரின் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வரி செலுத்தச் சொல்லியதைத் தொடர்ந்து அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக வேல்முருகன் கடந்த 25-ம் தேதி மாலை தூத்துக்குடி பயணமானார். 

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே வேல்முருகனைக் கைது செய்த போலீஸார், பின்னர் சுங்கச்சாவடி வழக்கில் கைது செய்ததாக கூறி அவரை விழுப்புரம் அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டபோது உண்ணாவிரதம் இருந்ததில் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், வேல்முருகனுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதன்படி, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு மற்றும் என்.எல்.சி முற்றுகைப் போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாகர்கோவில் கோட்டாறு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் வேல்முருகனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியில் வரவுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!