'தங்கத் தமிழ்ச்செல்வனை சேர்த்துக்கொள்வோம்; பதவி தரமாட்டோம்!'- முதல்வர் பழனிசாமி தடாலடி

``டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எங்கள் அணியில் இணைந்தால் அமைச்சர் பதவி இல்லை'' என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 
பழனிசாமி

டெல்லியில் நேற்று நடந்த மத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையில் அ.தி.மு.க சார்பில் நடைபெறும் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அவருக்கு திருச்சி அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், திருச்சி மாவட்டச் செயலாளரும் எம்.பியுமான குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். 
 
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட நான்,  நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, பிரதமர் மோடி ஆகியோரிடம் வலியுறுத்திப் பேசியுள்ளேன். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் பட்டியலை தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் வழங்கிவிட்டது. ஆனால், கர்நாடகா மட்டும்தான் காவிரி ஆணையத்துக்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமிக்கவில்லை. காவிரி ஆணையம் விரைவாக செயல்பட மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்திருந்தீர்கள். தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதே, அணை திறக்க வாய்ப்புள்ளதா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``மேட்டூர் அணையில் 90 சதவிகிதம் தண்ணீர் இருந்தால்தான் அணை திறக்க வாய்ப்புள்ளது. தற்போது அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகுதான் பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படும்'' என்று கூறினார்.

டி.டி.வி தினகரன் அணியில் இருந்து, 8 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் அணியில் இணைய இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையா என்று கேட்டதற்கு, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தால் பாராட்டுக்குரியது. தங்கத் தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பது எப்படி சாத்தியமாகும்? எனவே, தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி தர முடியாது. நீக்கப்பட்டவர்கள் அமைச்சர் பதவி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கான சட்ட விதிகளும் இல்லை'' என்றார்.

18 எம்.எல்.ஏ-க்களையும் தினகரன் பிரித்து வைத்துக்கொண்டு இடைத்தேர்தல் வரவேண்டும் என செயல்படுகிறாரா எனக் கேட்டதற்கு, தற்போதைக்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால் இதுகுறித்து கருத்துக்கூற இயலாது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!