வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (18/06/2018)

கடைசி தொடர்பு:16:15 (18/06/2018)

`இதுபோன்ற தவறு இனி நடைபெறாது’ - சொன்னதைச் செய்த எம்.எல்.ஏ

நடைபாதையில் ஏற்படுத்திய சேதங்களை எங்கள் குழுவினர் சரி செய்துவிட்டனர் எனத் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் ட்வீட் செய்துள்ளார். 

அன்பழகன்

தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை அண்ணாநகரில் உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது. இதற்காக, சென்னை ஈகா தியேட்டர் - கோயம்பேடு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும் சேதப்படுத்தியும் பேனர்களும் கொடிக் கம்பங்களும் நடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் ட்விட்டரில், `புதிய கிரானைட் நடைபாதையைச் சேதப்படுத்தி கொடிக் கம்பங்கள் நட்டுள்ளதற்கு நன்றி. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது’ எனப் பதிவிடப்பட்டது.

அன்பழகன்

மேலும், “நடந்த சிரமத்துக்கு மன்னிக்கவும். எங்களால் ஏற்பட்ட சேதத்தை எங்கள் கட்சித் தொண்டர்கள் சரி செய்வார்கள். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாது. சேதங்களைச் சரி செய்த புகைப்படம் விரைவில் பதிவிடப்படும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என அன்பழகன் முன்னதாகக் கூறியிருந்தார்.

தற்போது அந்தப் பகுதிகள் சீரமைக்கப்பட்டுவிட்டதாகத் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சேதமடைந்த இடங்களை எங்கள் குழுவினர் வெற்றிகரமாகச் சரி செய்துவிட்டனர். எந்த ஒரு பகுதியும் சரிசெய்யப்படாமல் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற தவறு இனி நடைபெறாது என்பதுக்கு நான் உறுதியளிக்கிறேன். நன்றி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.