வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (18/06/2018)

கடைசி தொடர்பு:18:15 (18/06/2018)

நீரிழிவு நோயைக் குறைக்க குமரியில் பனைமரம் நடும் குழுவினர்!

பனைமரங்கள் அதிகமாக இருந்திருந்தால் ஒகி புயலின்போது காற்றின் வேகம் குறைந்திருக்கும்.

நீரிழிவு நோயை உருவாக்கும் வெள்ளைச் சீனி பயன்பாட்டை 2050-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பனை மரம் நடும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக பனை நாடு இயக்க நிறுவனர் ஜெகத்கஸ்பர் தெரிவித்தார்.

பனைமரம் நடும் குழு

பனை நாடு இயக்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடும் திட்டம் இன்று தொடங்கியது. நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் 100 பனைமர விதைகளைக் கல்லூரி மாணவிகள் நட்டனர். பின்னர், சாமித்தோப்பு, முகிலன் குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் பனைமர விதைகள் நடப்பட்டன. இதுகுறித்து பனை நாடு இயக்க நிறுவனர் ஜெகத்கஸ்பர் கூறுகையில், ``ஒகி புயல் காரணமாகக் குமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு 50 லட்சம் பனை மரங்கள் இருந்தன. பனை வெல்லம், கருப்புக்கட்டி போன்ற உணவுகளை அதிகமாகத் தின்றபோதும் மக்களுக்கு நீரிழிவு நோய் வரவில்லை. இப்போது பனைமரங்களும் பனை உணவுகளும் குறைந்துவிட்டன. உணவு பாதுகாப்பில் பனை உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு.

பனைமரம் நடும் குழு

வளிமண்டல நச்சுத் துகள்களைப் பனைமர இலைகள் ஈர்த்துக்கொள்ளும். வறட்சி, பெருவெள்ளத்தைத் தாங்கும் சக்தி பனைமரத்துக்கு உண்டு. பனை ஓலைப் பாய், பெட்டி முடைதல் போன்ற 100 வகையான வேலை வாய்ப்புகளின் பட்டியலை வைத்துள்ளோம். 2050-ம் ஆண்டுக்குள் வெள்ளைச்சீனி பயன்பாட்டை 50 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பனைமரம் நடும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். கருப்புக்கட்டி, பனங்கல்கண்டு போன்ற இனிப்புக்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவது தடுக்கப்படும். பனைமரங்கள் அதிகமாக இருந்திருந்தால் ஒகி புயலின்போது காற்றின் வேகம் குறைந்திருக்கும். சுனாமி மற்றும் வெள்ளத்தின் வேகத்தைக் குறைக்கும் தன்மை பனைமரத்துக்கு உண்டு. தென்னை மரத்தை வண்டு தாக்கும். ஆனால், பனைமரத்தை பூச்சிகள் தாக்காது. 120 ஆண்டுகள் வாழும் பனைமரம், நட்ட 20 வருடத்தில் பலன் தரும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை டச்சுப்படை தாக்கியபோது எதிரிகளை வீழ்த்த பனைமரத்தைப் பயன்படுத்தினர்.

பனை மரம் நடும் குழு

முன்பு பல ஆயிரம் பேர் பதநீர் இறக்கி பிழைத்தனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாநாடு சென்னையில் வரும் 23-ம் தேதி நடக்கிறது. அதில் பனைமரம் சார்ந்த உணவுவகைகளைப் பரிமாற இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்துக்குள் குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை மரங்கள் நட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரங்கள் நடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். 20 ஆண்டுக்குள்
50 லட்சம் மரங்களைத் தமிழகத்தில் உருவாக்குவோம்" என்றார்.