வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (18/06/2018)

கடைசி தொடர்பு:18:30 (18/06/2018)

`பாடப் புத்தகத்தில் ராஜேந்திர சோழன் வரலாறு!’ - ராமகோபாலன் கோரிக்கை

``ராஜராஜ சோழனைவிட மிகச்சிறந்த மன்னன் ராஜேந்திர சோழன் வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்'' என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை வைத்துள்ளார்.

ராமகோபாலன்

அரியலூர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் தமிழக பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாநாட்டில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கலந்துகொண்டு பேசுகையில், ``நாட்டில் உள்ள இந்துக்களுக்காக இந்து முன்னணி பரிந்து பேசும், வாதாடும். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்து முன்னணி அரசியலுக்குப் போகாது. பிரிவினைவாத சக்திகள் நாட்டில் பல்வேறு வடிவங்களில் நடமாடிக்கொண்டிருக்கின்றன. அவை எந்த விதத்தில் வந்தாலும், அவற்றை இந்து முன்னணி எதிர்த்துப் போராடும். கரூர் மாவட்டம் ஓமாம் புலியூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை நீதிமன்றம் உத்தரவையும் மீறி சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்க இந்து முன்னணி போராடும். யார் எந்த அமைப்பாக இருந்தாலும் எங்களுக்குப் பயமில்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வீ.களத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெறாத செல்லியம்மன் கோயில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆட்சியரிடமும் காவல்துறையினரிடமும் மனுக்கொடுத்துவருகின்றனர். ஆனால், ஆட்சியர்கள் ஒரு காரணத்தைக் காட்டி திருவிழா நடத்த அனுமதி தரமறுக்கிறார்கள். திருவிழாவை நடத்த சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதேபோல் ராஜராஜ சோழனைவிட மிகச்சிறந்த மன்னன் ராஜேந்திர சோழன் வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். அதற்காகப் பலமுயற்சிகளை எடுத்து வருகிறோம். ஸ்ரீரங்கம் கோயில் புனிதத்தைக் காக்க வேண்டும். தமிழகத்தை உலகறிய செய்த ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும்'' என்று பேசினார்.

மாநாட்டில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.