"நதிகள் இணைப்பு இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமல்ல!'' - தமிழக விவசாய சங்கம் | "The rivers connection is not possible in today's practice!" - Nallusamy

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (18/06/2018)

கடைசி தொடர்பு:17:12 (18/06/2018)

"நதிகள் இணைப்பு இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமல்ல!'' - தமிழக விவசாய சங்கம்

நதிகள் இணைப்பு குறித்த கட்டுரை...

``நதிகள் இணைப்புப் பற்றித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவது இன்றைய நடைமுறைக்கு ஏற்புடையதல்ல'' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி.   

நதிகள் இணைப்பு (காவிரி)

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற `நதிகளை மீட்போம்’ என்ற விழிப்புஉணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்புத் திட்டம் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசைத்  தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. கங்கை சீரமைப்புப் பணி போன்று தேசிய தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை காலதாமதமின்றி தயாரிக்க வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்துக்குத் துரிதமாகச் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது'' என்றார். 

அதேபோல், கடந்த மாதம் சேலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலங்களைத் திறந்துவைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்துக்குக் கோதாவரியிலிருந்து 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்றும், அதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. மேலும், தெலங்கானா, ஆந்திரா வழியாக கோதாவரி நீர் தமிழகத்துக்குக் கொண்டு வரப்படும் என்றும், நீர்ப் பிரச்னையில் குறிப்பிடத்தகுந்த தீர்வாக இது இருக்கும்'' என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில விளக்கங்களைச் சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி

அதனைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று (17-06-2018) நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் தமிழக விவசாயிகள் நலன் கருதி முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். காவிரி ஆணையம் தனது பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை மத்திய அரசு இணைக்க வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் உபரி நீர் வீணாவதைத் தடுக்க முடியும். மேற்கு நோக்கிப் பாயும் பம்பா, அச்சன்கோவில் நதிகளின் உபரி நீரைத் தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்குத் திருப்பிவிட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.  

நல்லுசாமிஇப்படித் தொடர்ந்து நதிகள் இணைப்பு பற்றித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமியிடம் பேசினோம். ``இன்றைய  சூழ்நிலையைப் பாதிக்காத வகையில் நதிகள் இணைப்பு என்பது அவசியம்தான். இது, பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் இணைப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் இன்றைய  சூழ்நிலையில் நதிகள் இணைப்பு என்பது அவ்வளவு சாத்தியமல்ல... அதாவது, நெருப்பு பிடித்து எரியும் வீட்டை அணைப்பதற்காகக் கிணறு வெட்டி தண்ணீர் எடுக்கும் கதையாக இருக்கிறது. இது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல... ஏனெனில், கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, இந்த நதிகள் இணைப்புத் திட்டம் நீர்த்துப்போக வைக்கும்;  நதிகள் இணைப்பு என்பது சூழலைக் கெடுக்கும்'' என்றார், அவர்.

ஒருபுறம், நதிகள் இணைப்புப் பற்றிப் பேசிவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறுபுறம் நதிகள் இணைப்பு குறித்துப் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த்தை விளாசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ``இன்றைக்குப் பல பேர் புதிது புதிதாகக் கட்சி தொடங்குகிறார்கள். இவ்வளவு நாள்கள் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்குக் காலம்போன காலத்தில் நதிகளை இணைக்கச் சொல்கிறார்கள்'' என்று கடந்த மே மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழா ஒன்றில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசியிருந்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்