`மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது!' - தலைமை நீதிபதி அதிரடி கருத்து

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்திரா பானர்ஜி

மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 50 கோடி ரூபாய்க்கு டெண்டர்விட்டு பூமிபூஜையும் செய்யப்பட்டுவிட்டது. நினைவிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால், மெரினாவில் அவருக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது எனச் சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஆஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில், ``நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை. நீதிமன்றம் கேட்டால் நினைவிட வரைபடத்தினை தாக்கல் செய்கிறோம். விதிமுறைகள் வகுப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நினைவிடம் கட்டப்பட்டது. அதற்கு உள்ளேதான் தற்போது ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படவுள்ளது" என வாதிடப்பட்டது. 

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ``மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் உட்பட எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கடற்கரை ஒழுங்கு மண்டலம் அனுமதித்த பகுதிகளில் மட்டுமே கட்டடம் அமைக்க வேண்டும். மெரினாவைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. தனிப்பட்ட கருத்துகள் சட்டமாகாது. தனிப்பட்ட கருத்துகள் வேறாக இருந்தாலும் சட்டத்தின்படியே தீர்ப்பு வழங்கப்படும். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்டபின்பே தீர்ப்பு அளிக்கப்படும்" எனக் கூறி வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமையக் கூடாது என தலைமை நீதிபதி கூறிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!