வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (18/06/2018)

கடைசி தொடர்பு:17:58 (18/06/2018)

``நிறையும் தண்ணீரைத் திறந்து விடுவதற்கு தமிழ்நாடு வடிகால் அல்ல!" - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ர்நாடக அணைகள் நிரம்பி, அவற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரை காவிரியில் திறந்து விடுவதற்கு தமிழ்நாடு ஒன்றும் வடிகால் அல்ல என்று தி.மு.க. செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

காவிரி

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து, கபினி அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், காவிரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சுமார் 35 ஆயிரம் கன அடி தண்ணீர்வரை திறந்து விடப்பட்டது. காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகள் அருவியிலும், ஆற்றிலும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல்லைத் தொடர்ந்து அங்கிருந்து, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 19 ஆயித்து 87 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி - குமாரசாமி - கமல்ஹாசன்

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமிக்கு, தான் நன்றி தெரிவித்துக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``பருவமழை பெய்து வருவதால் இந்தாண்டு தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது" என்றார். இதற்கிடையே, கர்நாடக அணை நிரம்பியதாலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இதற்கு கமல் ஏன் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கேள்வியெழும்பியது.

கமலின் கருத்து பற்றி தி.மு.க. செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன், ``கபினியும், கிருஷ்ணராஜ சாகரும் நிறைந்தால் தண்ணீர் திறக்கவேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடகா ஆளாகும் எனும் அடிப்படை செய்தியைக் கூடவா கமல்ஹாசன் அறியாமலிருக்கிறார். காவிரியில் தண்ணீர் வருவதென்பது கர்நாடகா நமது உரிமையை நிலைநாட்டியதால் வருவதில்லை. மாறாக, அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வருவது" என்று முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில், கபினி அணையிலிருந்து தமிழகத்துக்குத் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. காரணம், கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து, அணைகளுக்கு வரும் தண்ணீர் குறைந்திருப்பதுதான்.

கபினியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைந்திருப்பது குறித்தும், கர்நாடக முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தது பற்றியும் கே.எஸ். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் - தி.மு.க``காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு, தமிழகத்தினுடைய நியாயங்களை மறுக்கிறது. கடைமடைப் பகுதியில்தான் காவிரியின் பயண தூரம் அல்லது ஆற்றின் நீளம் அதிகம். `உலக அளவில் கடைமடைப் பகுதி விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று 60 ஆண்டுகளுக்கு முன்னரே, ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. ஹெல்சிங் கொள்கைதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு அடிப்படை வரையறை. அந்தக் கொள்கையின்படி, கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீர் சென்று சேர வேண்டும். ஆற்றுப்பாசனம், நீர்ப்பாசனங்களுக்கும் இந்தக் கொள்கைதான் அடிப்படை. 

ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கிற அந்தக் கொள்கையை மக்கள் சட்ட ரீதியாகவும், தார்மிக அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால், அந்த அடிப்படையில் அல்லாமல் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான நியாயங்கள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. 

ராணி மங்கம்மாள் காலத்திலும், ராஜராஜ சோழன் காலத்திலேயும்கூட தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பது மறுக்கப்பட்டு வந்துள்ளது. ராணி மங்கம்மாள் கர்நாடகத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, எல்லையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரின் தடுப்புச்சுவர் உடைபட்டு, வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது. ராஜராஜ சோழனும் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படாத கோபத்தில்தான் கல்லணையைக் கட்டியதாக நாம் அறிகிறோம். 

பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜாஜி, கர்நாடத்தில் முதல்வராக இருந்த அவரின் சிஷ்யர் அனுமந்தப்பாவிடம் உரிமையாகக் கேட்டு தண்ணீர் திறந்து விடப்பட்ட காலமும் உண்டு. இவையெல்லாமே கடந்த காலச் சம்பவங்கள். தொடர்ந்து அதே நிலை நீடிக்கிறது.

நம்முடைய சட்டங்களும், நீதிகளும், நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் நாம் கவனிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் ஒரு தீர்ப்பு கொடுத்தாகி விட்டது. அந்தத் தீர்ப்பு தமிழகத்துக்கு முழுமையான தீர்ப்பாக இல்லாவிட்டாலும், ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டு, அதனடிப்படையில் ஆணையத்தை அமைச்சிருக்காங்க. இன்னும் 15 வருஷத்துக்கு நீதிமன்றத்தை அணுக முடியாது. இதற்கிடையில் கமல்ஹாசன் போய் கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து விட்டு, பிரச்னை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்கிறார். 20-க்கும் மேற்பட்ட முறை பேச்சு நடத்தியாகி விட்டது. பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால்தான், நடுவர் மன்றம் அதைத் தொடர்ந்து நீதிமன்றம் என்று சென்றோம். இப்போது பேச்சுவார்த்தை என்று கமல் சொல்வாரானால், நடுவர் மன்றம், நீதிமன்றத் தீர்ப்பு எல்லாம் எதற்கு?

காவிரியில் தண்ணீர் வந்ததற்கு முதல்வர் குமாரசாமிக்கு நன்றி தெரிவித்திருந்தார் கமல். இப்போ கபினியிலிருந்து வரும் தண்ணீர் குறைந்து விட்டதே. இதற்கு என்ன சொல்லப் போகிறார் அவர்?  

கர்நாடகத்தைப் பொறுத்தவரை என்ன நினைக்கிறார்கள் என்றால், வடிகாலில் திறந்துவிடுவது போல, கபினியில் தண்ணீர் திறந்து விட்டனர். மழை, வெள்ளம் வந்துவிட்டால், இஷ்டத்துக்கு மானாங்கன்னியாக எப்படி வேண்டுமானாலும் தண்ணீர் வெளியேறட்டும் என்று கருதி, திறந்து விட்டுள்ளனர். தமிழகத்திற்கென்று நியாயங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு மானாங்கன்னியாக வெள்ளம் வந்து திறந்து விடுவதற்கான வடிகால் கிடையாது. காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. காவிரி ஆற்றைப் பொறுத்தவரை, எங்கெல்லாம் பாய்ந்தோடி கடலுக்குச் செல்கிறதோ அதுவரை காவிரி நதிதான். 

`மாநில சுயாட்சி வேண்டும். மத்தியில் அதிகாரங்களை வைத்திருக்கக் கூடாது' என்று வலியுறுத்தும் நாங்கள், நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்றால், அதன் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று நான் உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளேன். நதிகள் ஒரு மாநிலத்திற்குத்தான் சொந்தம் என்றால், அவர்கள் அண்டை மாநிலங்களுக்குத் தண்ணீர் கொடுக்காமல் அடம்பிடிப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தாமிரபரணி தவிர, மற்ற அனைத்து நதிகளுமே அண்டை மாநிலத்திலிருந்து தமிழகத்தில் பாய்ந்தோடுபவைதாம். எனவே, நாம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. அதனால்தான், நதிகளை தேசியமயமாக்கினால்தான் தமிழகத்துக்கு ஓரளவுக்காவது நியாயம் கிடைக்கும் என்று கருதி வழக்கு தொடுத்தோம். 

கமல் - காவிரி - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுடன் கமல்ஹாசன் எப்படிப் பேசலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி, அதிலும் பிரச்னைகள் இருக்கும்போது, கர்நாடகா எதையும் செய்யாத சூழ்நிலையில், எந்த அடிப்படையில், எந்த நியாயத்தின்பேரில் கமல் கர்நாடக முதல்வரிடம் பேசினார். காவிரியைப் பொறுத்தவரை தமிழகத்தின் நியாயங்கள் மீட்கப்படவேண்டும். நமக்கான உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதுதானே அவசியம். 

ஒரு தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் ஆணையம் அமைத்துள்ளார்கள். மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தாரிட்டி என்ற பெயரில் ஓர் அமைப்பை போட்டிருப்பதே பம்மாத்து வேலை. சரி, அதை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் கிடைக்கும் உரிமைகளை சிறிதளவாவது மீட்க வேண்டும். இப்பிரச்னையில் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தி எதுவுமே நடக்கவில்லை என்பதால்தானே, அடுத்தகட்டத்துக்குச் சென்றோம் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். 

தமிழ்நாட்டை வடிகாலாக நினைத்துக்கொண்டு, மானாங்கன்னியாக தண்ணீரை வெளியேற்றியிருக்கிறது கர்நாடகா. தற்போது தண்ணீரின் அளவு குறைந்து விட்டதே. அதற்கு என்ன வழி?" என்று கேள்வி எழுப்பினார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்