`அவங்கள வளர்த்துவிடுவீங்க; வீரத்த எங்ககிட்ட காட்டுவீங்க!' அரசுக்கு எதிராகப் பொங்கும் சாலையோரக் கடைக்காரர்கள்

``மணல் கடத்துபவர்களையும் லாட்டரி சீட் விற்பவர்களையும் வளர்த்துவிடுங்கள். எங்களைப் போன்ற தினக்கூலிகளிடம் உங்களின் வீரத்தைக் காட்டுங்கள்'' எனச் சாலையோர கடைக்காரர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோர கடைக்காரர்கள்

அரியலூர் மாவட்டம், நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் வரை சாலையின் இருபுறமும் சிறுவியாபாரிகள் கடைகளை அமைத்து நீண்ட வருடங்களாக வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சாலையோரக் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸார் உதவியுடன் தடாலடியாகக் கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும், தள்ளுவண்டியில் கடைகளை அமைத்திருந்தவர்களின் தள்ளுவண்டிகளைப் பறிமுதல் செய்தனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீண்டும் கடைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலையோர சிறு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``மாவட்டத்தில் பல பகுதிகளில் மணல் கடத்தல், லாட்டரி சீட், கஞ்சா விற்பனை எனச் சட்ட விரோதச் செயல்களில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களைத் தடுக்காத வருவாய் மற்றும் காவல்துறையினர் எங்கள்மீது அடக்குமுறையைச் செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். சாலையோரக் கடைகளை அமைக்கச் சட்டமே அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக அரசின் சார்பில் கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான கமிட்டியின் பரிந்துரையின் பேரிலேயே அப்புறப்படுத்த வேண்டும். சாலையோரக் கடைகளை மட்டும் அப்புறப்படுத்துவதோடு தள்ளுவண்டிகளையும் பறிமுதல் செய்வது கண்டனத்துக்குரியது. 15 நாள்களுக்குள் சாலையோரக் கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் அனுமதி தராவிட்டால் தடையை மீறி கடைகளை அமைப்போம். அதேபோல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்'' எனக் கூறினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!