வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (18/06/2018)

கடைசி தொடர்பு:19:25 (18/06/2018)

`மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தமிழை நீக்குவதா?’ - கனிமொழி காட்டம்

மாணவர்கள், இந்தி அல்லது சம்ஸ்கிருதத்தை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது நாடெங்கும் மற்றொரு தீவிர மொழிப்போராட்டத்தை உருவாக்கும்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை மத்திய அரசு நீக்க முடிவு செய்திருப்பதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

கேந்திர வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் பணியாற்ற சி.பி.எஸ்.இ சார்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராகப் பணியாற்ற முடியும். இந்த நிலையில், தேர்வுக்கான மொழித் தேர்விலிருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகள் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதனால், தமிழ் மொழிக்கான தேர்வுக்கு தயாராகி வரும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ``மத்திய அரசு தகுதித் தேர்விலிருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகளை நீக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு, கூட்டாட்சி தத்துவத்துக்கு நேரடியாக விடப்பட்டுள்ள சவாலாகும். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ள சி.பி.எஸ்.இ மாணவர்கள், உரிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் கடுமையான நெருக்கடிக்கு ஆளாவார்கள். இதன் காரணமாக மாணவர்கள், இந்தி அல்லது சம்ஸ்கிருதத்தை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது நாடெங்கும் மற்றொரு தீவிர மொழிப்போராட்டத்தை உருவாக்கும். இந்து, இந்தி, இந்துஸ்தான் என்ற பி.ஜே.பி-யின் மோசமான திட்டத்தின் ஒரு பகுதியே இது’’ என்று தெரிவித்துள்ளார்.