வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (18/06/2018)

கடைசி தொடர்பு:19:56 (18/06/2018)

`ராஜராஜ சோழன் சிலையை மறைக்கும் இரும்புக் கம்பிகள்!’ - பொதுமக்கள் வேதனை

60 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு பெரிய கோயிலுக்குள் வைக்கபட்டுள்ள ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் பக்தர்கள் பார்க்கும் வகையில் இல்லாமல் சிலைகள் மறைக்கும் வகையில் வைக்கபட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள் மக்கள்.

ராஜராஜ சோழன் சிலையை எளிதில் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் எனச் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராஜராஜன் சிலை

60 ஆண்டுகளுக்குப் பிறகு, மீட்கபட்டு ராஜராஜ சோழன் மற்றும் அவரின் பட்டத்து இளவரசியான உலகமாதேவி சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு உள்ளே வைக்கப்பட்டதை அனைவரும்  ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்ப்பதோடு இதைப் பாராட்டியும் கொண்டாடியும் வருகிறார்கள். இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலையை நன்றாகப் பார்க்கும் வகையில் வைக்கபடவில்லை என்றும் பாதுகாப்புக்காக இரும்புக் கம்பிகள் மற்றும் சின்ன பலகைக் கொண்டு அடிக்கப்பட்ட சட்டம் போன்ற கதவு சிலைகளை மறைப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன், அவரின் பட்டத்தரசியான உலகமாதேவி ஆகியோர் சிலைகள் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு பெரியகோயில் மூலவருக்கு எதிரே பெருவுடையாரை வணங்குவதுபோல் வைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு சிலைகளும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காணமல்போனது. காணாமல்போன இந்தச் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் உள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார், குஜராத் மாநிலத்துக்குச் சென்று அங்குள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டு கடந்த மாதம் 28-ம் தேதி ரயில் மூலம் சென்னைக்கு எடுத்து வந்தனர். அங்கேயே கொண்டாட்டத்துடன்கூடிய உற்சாக வரவேற்பு சிலைகளுக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கும்பகோணம் திருவையாறு வழியாகத் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சிலைகள் கொண்டு வரப்பட்டபோது பொது மக்கள் ஒரு திருவிழாவைப்போல் கொண்டாடியதோடு, `நீங்க நல்லா இருக்கணும்’ என ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை மனதாரப் பாராட்டினர்.

ராஜராஜன் சிலை

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியகோயில் பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே உள்ள தியாகராஜர் மண்டபத்தில் கண்ணாடி பிரபைக்குள் ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் வைக்கபட்டன. வெளிப்புறத்தில் சிலைகளின் பாதுகாப்புக்காக இரும்புக் கம்பிகள் மற்றும் சின்ன பலகைக் கொண்டு சட்டம் போன்ற சின்ன கதவு அடிக்கப்பட்டு சீல் வைக்கபட்டது. அந்த இடத்தில் எப்போதும் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து ராஜராஜன் சிலையைக் காண்பதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், அவர்கள் ராஜராஜன் சிலையைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் சிலரிடம் பேசினோம், ``ராஜராஜனைப் பார்க்கப்போறோம் என மனதில் பெரிய கோயிலின் கம்பீரத்தை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வந்தேன். ஆனால், என்னால் ராஜராஜனை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. சிலையின் பாதுகாப்புக்காக அடிக்கப்பட்ட சின்ன கதவில் உள்ள கம்பிகள் மற்றும் பலகைகள் சிலைகளை மறைத்துவிடுகிறது. சிறிய அளவிலான சிலைகள் என்பதால் முகத்தைக்கூட சரியாகப் பார்க்க முடியவில்லை. மேலும், பல நேரங்களில் போலீஸார் சிலைகளைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதும் இல்லை. அதோடு பெருவுடையார் சந்நிதிக்குச் செல்பவர்கள் இரும்புக் கம்பிகளால் பதிக்கப்பட்ட வழியில்தான் சென்று தரிசனம் செய்ய வேண்டும். வரிசையில் சென்றபடியே தூரத்தில் இருக்கும் சிலையைப் பார்த்தபடியே சென்றுவிடுகிறோம். அதன் பிறகு, மீண்டும் திரும்பி வந்து ராஜராஜனைப் பார்க்க முடியாது. எனவே, போகும்போதே சிலையையும் பார்த்துவிட்டுச் செல்லுமாறு வழியை மாற்றி அமைக்க வேண்டும்.

ராஜராஜன் சிலை

60 ஆண்டுகளுக்குப் பிறகு, சிலையை மீட்டுக் கோயிலுக்கு உள்ளேயே வைக்கவும் செய்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை பாராட்டுவதோடு வாழ்த்தவும் செய்கிறோம். சிலையின் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றுதான் என்றாலும் சிலைகளுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் எல்லோரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். இதை ஐ.ஜி பொன்.மாணிக்கவேலே கவனத்தில் கொண்டு ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் நன்கு தெரிவது போலவும் எல்லோரும் பார்க்கும் வகையிலும் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லாமல் வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க