வேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு! - விளாசும் பிருந்தா காரத் | CPI(M) Brindha karat slams BJP government over thoothukudi massacre

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (18/06/2018)

கடைசி தொடர்பு:20:22 (18/06/2018)

வேதாந்தாவின் நன்கொடைக்கு மோடியின் கைம்மாறுதான் துப்பாக்கிச்சூடு உத்தரவு! - விளாசும் பிருந்தா காரத்

மக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போலீஸார்தான். இதுகுறித்து காவல்துறையைச் சேர்ந்த ஒருவர்மீதுகூட வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`வேதாந்தா குழுமம் பா.ஜ.க-வுக்கு கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இந்தச் சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணை போகிறது” என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

பிருந்தா காரத்

தூத்துக்குடி சி.பி.எம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சில கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேசினேன். இரவில் சீருடை அணியாமல் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து ஆண்களைக் கைது செய்து வருகின்றனர். இதனால், பயந்து குழந்தைகளுடன் ஊர்க் கோயிலில் முன்பாக உறங்குகிறோம் எனப் பெண்கள் கூறினார்கள். இரவு நேரங்களில் இவ்வாறு கைது செய்வதற்கு அனுமதி கொடுத்தது யார். விசாரணை செய்ய வேண்டுமென்றால் பகலில் விசாரணை செய்வதில் என்ன தயக்கம்?

மே 22-ம் தேதி நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக அப்பாவி மக்கள் பலர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதில் மக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போலீஸார்தான். இதுகுறித்து காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் மீதுகூட வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன். இச்சம்பவம் நடைபெற்று 25 நாள்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக்குழு அறிக்கை அரசைக் கட்டாயப்படுத்தாது. இந்த விசாரணைக்குழு மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாதது தெளிவாகவே தெரிகிறது. எனவேதான், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கான உதவிகளை அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும்.

வர்த்தகத்தைச் சுலபமாக்குதல் என்ற மோடியின் கொள்கைதான் இத்தகைய துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமாக அமைந்துள்ளது. வேதாந்தா குழுமம், மோடி மற்றும் பா.ஜ.க-வுக்குக் கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணைபோகிறது.

இந்த ஆலையின் விரிவாக்கத்துக்கு முக்கிய காரணம் மோடி அரசும் முந்தைய மத்திய ஆட்சியாளர்களும்தான். அதேபோல இதற்கு தற்போதைய அ.தி.மு.க அரசும் முந்தைய ஆட்சியாளர்களும்தான் காரணம். ஸ்டெர்லைட் ஆலை, மலிவான காப்பரை இறக்குமதி செய்து, அதை மலிவான கூலி கொடுத்து வேலையாட்களைப் பயன்படுத்தி சுற்றுபுறச் சூழலைப் பாழக்கி வருகிறது. இதன் பெயர் தொழில் வளர்ச்சி அல்ல. தொழில் சீரழிவு. போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 6 அப்பாவிகளைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது அரசு. இது தேசியப் பாதுகாப்பு அல்ல. ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனத்துக்கான பாதுகாப்பு” என்றார்.    

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க