முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கிய பரிசு!

மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உம்பளச்சேரி மாடுகள் மற்றும் ஏர் கலப்பையை ஓ.எஸ்.மணியன் பரிசாக வழங்கினார்.  

எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பைப் பெற்றுதந்த வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை வீதியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அமைச்சர் ஓ.எஸ்.மணியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ-க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ``காவிரி பிரச்னை சாதாரண விஷயம் இல்லை. 38 ஆண்டுகள் நடந்த போராட்டத்துக்குத் தற்போது தீர்வு கிடைத்துள்ளது. பலர் போராடியிருக்கலாம். யார் போராடினால் தீர்வு கிடைக்கும் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த 1970-ம் ஆண்டு பிரச்னை உருவானது. அப்போதைய முதல்வர் கருணாநிதி வழக்கு தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் மிரட்டலைத் தொடர்ந்து அவர், 1972-ல் அந்த வழக்கை வாபஸ் பெற்று, தமிழ விவசாயிகளுக்குத் துரோகம் செய்தார். தி.மு.க பல சிக்கலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சட்டமன்ற மேலவைக்கும் கீழ் அவைக்கும் தெரியாமலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றது. இன்று கேள்வி கேட்கும் ஸ்டாலின் அன்று தவறு செய்த தி.மு.க-வால்தான் காவிரி நீர் கிடைக்காமல் போனது அன்றே அரசிதழில் வெளியிட்டிருந்தால் என்றோ தண்ணீரைப் பெற்றிருக்க முடியும். 

எடப்பாடி பழனிசாமி


செயல் தலைவர் அல்ல ஸ்டாலின்; செயல்படாத தலைவர். ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறார் கண்டிப்பாகத் தண்ணீர் கிடைக்கும். குறுவைத் தொகுப்பு திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயன் பெற வேண்டும். விவசாயிகளுக்கு டீசல் இன்ஜின்களுக்கு மானியம் வழங்கப்படும். காப்பீடு தொகை மூலம் இழப்பீடாக 3,000 கோடி ரூபாயை, நாட்டிலேயே இந்தியாவிலே தமிழகம்தான் பெற்றுள்ளது வெள்ள நிவாரணம் 27 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். முதல்வராக இருந்தாலும் நானும் விவசாயிதான். விவசாயிகளுக்கு அனைத்து நன்மைகளையும் இந்த அரசு செய்து வருகிறது. குடிமராமத்து பணிகள் மூலம் 1,511 ஏரியைத் தூர்வாரும் பணி, விவசாயிகளுடன் இணைந்து சீரமைக்கப்படும்’’ என்றார். பொதுக்கூட்டத்தின் இறுதி நிகழ்வாக முதலமைச்சர் பழனிசாமிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உம்பளச்சேரி மாடுகள் மற்றும் ஏர் கலப்பையை வழங்கினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!