வெளியிடப்பட்ட நேரம்: 23:06 (18/06/2018)

கடைசி தொடர்பு:09:46 (19/06/2018)

`11-ம் வகுப்புக்கு ரூ.61 ஆயிரம் ஃபீஸ்; துண்டுச் சீட்டில் பில்!’ - தஞ்சைப் பள்ளிக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு கூறி வருகிறது. ஆனாலும் அரசின் உத்தரவை தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதே இல்லை. தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்புக்கு 61,000 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, வெறும்  வெள்ளைத் துண்டு சீட்டில் அதற்கான  தொகையை எழுதி பில்லாக கொடுத்து பெற்றோரை அதிர வைத்துள்ளார்கள். இதுபோல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புகார் வாசிக்கிறார்கள் அப்பகுதிவாசிகள்.

தனியார் பள்ளிகள்

தமிழக அரசு, தனியார் பள்ளிகள் ஒவ்வொரு வகுப்புக்கும் இவ்வளவு தொகைதான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதை தனியார் பள்ளிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அரசும் பெயரளவுக்கு மட்டுமே அறிவித்துவிட்டு, பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ரத்தக்கண்ணீர் வடித்தாலும் பரவாயில்லை எனக் கடன் வாங்கி எப்பாடு பட்டாவது பள்ளிகள் கேட்கும் தொகையைக் கட்டி விடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளும்,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். 

தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் நடந்தாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அவர்கள், தஞ்சாவூரில் பல பள்ளிகளில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமி கூறுகையில், ``ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என போரடி வருகிறோம். இந்த வருடமும் இதேபோல் போராட்டமும் நடத்தினோம். பெயரளவுக்குக் கூட அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ் காலனியில்  உள்ள பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் பெண் ஒருவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகனுக்கு கட்டணம் செலுத்தச் சென்றிருக்கிறார். 

முதல் பருவ காலத்துக்கு மட்டும் 61,000 ரூபாய் கட்டணம் கேட்டு அதிரவைத்துள்ளது பள்ளி நிர்வாகம். கட்டணத்தைக் கேட்டு திகப்படைந்த அந்த பெண், தன்னிடம் 21,000 ரூபாய்தான் இருக்கு என வெள்ளந்தியாக சொல்லியிருக்கிறார். இருப்பதை இப்போது கட்டிவிட்டு பத்து தினங்களுக்குள் பாக்கிப் பணத்தை கட்டிவிட வேண்டும் என்று பள்ளி தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். மேலும், கட்டிய பணத்தில் 5,000 ரூபாய்க்கு மட்டும் கம்ப்யூட்டர் பில் கொடுத்துவிட்டு, பாக்கி பணத்துக்கு வெள்ளைத் துண்டுச் சீட்டில் மளிகைக் கடையில் எழுதிக் கொடுப்பதுபோல் கொடுத்துள்ளார்கள். பயந்துபோன அந்தப் பெண் `எல்லா பணத்துக்கும் கம்ப்யூட்டர் பில் கொடுங்க’ என கேட்டிருக்கிறார்.

அதற்கு பாக்கி பணத்துக்கெல்லாம் `எங்க ஆடிட்டர்கிட்ட போய்ட்டுதான் வரும். இதுதான் பில்லே’ என கூறியிருக்கிறார்கள். அப்படியும் பில் கேட்ட அந்தப் பெண்ணை, `ஒரு தடவை சொன்னா புரியாதா?’ என பக்கத்தில் அழைத்து `உங்களுக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் இதுபோல்தான் தருகிறோம்’ என அதட்டிச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் பணியில் இருந்த பெண்கள். 

இது ஒரு உதராணம்தான் அனைத்துப் பள்ளிகளிலும் இதுபோலத்தான் நடக்கிறது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்கள் நடப்பதை தடுப்பதற்கு கடந்த வருடம் மாசிலாமணி கல்விக்குழு ஒன்றை அமைத்தது அரசு. இந்த வருடம் அதை புதுப்பிக்கவும் இல்லை. புதிய குழு அமைக்கவும் இல்லை. பெற்றோர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகும் இந்த பிரச்னையில் அரசு முழுமையாகக் கவனம் செலுத்தி, கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க