வெளியிடப்பட்ட நேரம்: 03:20 (19/06/2018)

கடைசி தொடர்பு:18:33 (19/06/2018)

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் ரத்து..! வட்டாசியர் அதிரடி

ஒரு தரப்பினர் கூறி தேர்தல் தேதியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் தேர்தலில் ஒட்டு போடும் வகையில் 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள தொலைதூர கல்வி இயக்கக படிப்பு மையங்களில் வாக்குசாவடி அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ரத்து செய்து சிதம்பரம் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பல்கலைக்கழக ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொதுக் குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தற்போது ஊழியர் சங்கlf தலைவராக இருக்கும் மனோகரன் அணிக்கும் முன்னாள் தலைவர் மதியழகன் அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுக்குழு பாதியிலேயே அவசரம் அவசரமாக
 முடிக்கப்பட்டது. இதில் இம்மாதம் 27-ம் தேதி ஊழியர் சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதை ஏற்க மாட்டோம் என ஒரு தரப்பினர் கூறித் தேர்தல் தேதியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் 
பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், தேர்தலில் ஒட்டு போடும் வகையில் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 
தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களில் வாக்குசாவடி அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

இதை தற்போது உள்ள ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏற்று கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்தத் தேர்தலை நீதிமன்றம் மூலம் தடை 
வாங்கி நிறுத்த எதிர்தரப்பினர் முடிவு செய்திருந்தனர். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தலில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகளைக் கைப்பற்றக் கடும் போட்டி உள்ளது. இந்தத் தேர்தலில் 8 ஆயிரத்து 500 பேருக்கும் மேல் ஒட்டு போட உள்ளனர். 

இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்கள், ஓட்டு மட்டுமே போடலாம். ஆனால் தேர்தலில் நிற்கமுடியாது என்று 
இப்போது உள்ள சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதனால் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர் சங்கத் தேர்தல் தொடர்பாக கடந்த 17-ம் தேதி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிபேச்சு வார்த்தை நடந்தது. இதில் தற்போது உள்ள ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன் ஆதரவாளர்கள், முன்னாள் தலைவர் மதியழகன் ஆதரவாளர்கள், பணிநிரவல் செய்யப்பட்ட  ஊழியர்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீசெல்வம் உள்ளிட்ட 3 தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் காரசாரமான விவாதம் நடந்தது. இதனையடுத்து வட்டாட்சியர் கூட்டத்தை முடித்துக் கொண்டார். நேற்று மீண்டும் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அமுதா தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மூன்று தரப்பினரும் கலந்து கொண்டனர்.  

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத் தேர்தல் நடத்துவதில் 3 பிரிவினரிடையே முரண்பாடான கருத்து இருப்பதால் 
அசாத்தியமான இந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். வரும் 27-ம் தேதி தேர்தல் நடத்தவோ அதற்கான ஆயத்தங்களை செய்யக்கூடாது என்றும் வட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாத காரணத்தினால் தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்வது இந்தக் கூட்டத்தில் முடிவு ஞெய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.