கடத்தல்காரர்களிடமிருந்து தொழிலதிபர் மீட்பு..! துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் | Police recover a businessman from kidnappers

வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (19/06/2018)

கடைசி தொடர்பு:08:04 (19/06/2018)

கடத்தல்காரர்களிடமிருந்து தொழிலதிபர் மீட்பு..! துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர்

தொழிலதிபரைக் காருடன் கடத்தி 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலிடமிருந்து தொழிலதிபரைக் காவல்துறையினர் சில மணி நேரத்தில் மீட்டனர். 

கடத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சண்முகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். 64 வயதாகும் இவர், புதுக்கோட்டையில் தொழிலதிபராகவும், ஏ.டி.ஆர் எனும் தனியார் பள்ளி தாளாளராகவும் உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் சொந்த செலவில் கோயில் கட்டியுள்ளார். அங்கு, வாராவாரம், ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுவது வழக்கம். மேலும் அருகில் உள்ள அவரின் நிலத்தைப் பார்வையிட்டு வருவார் எனக் கூறப்படுகிறது.

பார்வையிடுவது

நேற்று மாலை அவர் வழக்கம்போல் தனது காரில் டிரைவர் தேவேந்திரனுடன் அவரின் வீட்டிலிருந்து கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவரின் தைல மர காட்டுக்குச் சென்றவர், காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தர்மராஜ் வந்த கார் கண்ணாடியை உடைத்து தர்மராஜ் மற்றும் அவரின் ஓட்டுநர் தேவேந்திரன் ஆகியோரை காரில் கடத்தியது. இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் தேவேந்திரன் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளனார். தேவேந்திரன் மற்றும் தர்மபிரபுவின் வாயையும் கையையும் கட்டி கடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தர்மராஜ் பிரபுவின் மகன் முத்துக்குமரனுக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், `உங்கப்பா எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். ரூ.2 கோடி பணம் கொடுத்துவிட்டு கந்தர்வக்கோட்டை அருகே வந்து உங்க அப்பாவை கூட்டிக்கொண்டு செல்லுமாறும் கேட்டப் பணத்தைக் கொடுக்கவில்லை எனில் உங்கள் தந்தையை கொலை செய்து விடுவோம்' என மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன், நடந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில், நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. அப்படையினர் திருவரங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காடுகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பணம் கேட்ட கும்பலை வளைத்துப் பிடிக்க திட்டமிடப்பட்டது. கந்தர்வகோட்டை அருகே தர்மராஜை கடத்தி வைத்து முத்துக்குமாரனிடம் கேட்ட பணத்தை பெற்றுக்கொள்வதற்காக ஒருவன் காத்திருந்ததை நோட்டமிட்டு போலீஸார் வளைத்துப் பிடித்தனர். ஆனால், தர்மராஜைக் கடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை அருகே கட்டுமாவடி என்கிற இடத்தில் உள்ள சோதனைச்சாவடியில், காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு அதிவேகமாக வந்த காரை நிறுத்திவிட்டு போலீஸாரைப் பார்த்ததும் காருக்குள் இருந்த 6 பேர் இறங்கி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், காரினுள் சென்று பார்த்தபோது, அந்தக் காருக்குள் தொழிலதிபர் தர்மராஜ் மற்றும் ஓட்டுநர் தேவேந்திரன் ஆகியோர் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர். அடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து தப்பியோடிய கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸாரிடம் 2 பேர் சிக்கியுள்ளதாகவும் மற்ற நான்கு பேர் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. சிக்கிய இருவரும் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தப்பியோடிய 4 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடத்தப்பட்ட தொழிலதிபர் தர்மராஜை, கடத்தப்பட்ட 7 மணி நேரத்தில் விரைந்து மீட்ட போலீஸாரை பலரும் பாராட்டிவருகின்றனர்.